இந்திய நலன்களுக்காக திட்டமிட்டு அரசாங்கத்தினால் அகதிகளாக்கப்பட்ட சம்பூர் மக்கள்

indiasrilankaதமிழ் மக்கள் வாழும் திருகோணமலை கொட்டியார் களப்புக்கருகாமையில் உள்ள சம்பூர் பிரதேசம் மற்றும் அதற்கு அண்மையில் உள்ள கூனித்தீவு, நவரத்னபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கு அண்மித்த எண்ணிக்கையானோரின் பூர்வீகப் பகுதிகளை எந்த வித சட்ட செயற்பாடுகளுமின்றி கைப்பற்றிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இவ்வாறு உள்நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டிருக்கும் கிழக்கு தமிழ் மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு குடிநீர், நிலத்தடி நீர் மற்றும் பிற விநியோகங்கள் அற்ற  மனித வசிப்பிடத் தகுதியற்ற வனப் பகுதியான இத்திக்குளம் பகுதியில் தங்கவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதானது சிங்கள இனவாத செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாகும்.
 
அரசாங்கத்தினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவோட் மின் உற்பத்தி  அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறான மின் நிலையம் அமைக்கப்பட முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல் கள ஆய்வுகள் மற்றும் இதர கள ஆய்வுகள் எதுவும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என்று மின்சார சபை உயரதிகாரிகள் மட்டத்தினர் தெரிவித்தனர். எனினும் 2007ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி ஜனாதிபதி மகிந்தவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியின் பிரகாரம், 10 ஆயிரம் ஏக்கர் பிரதேசம் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இதில் 500 ஏக்கர் பகுதி இந்திய அனல் மின் நிலைய அமைப்புக்கு ஒதுக்கப்பட்டது எந்தவிதமான கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலாகும்.
 
இதுவரை அவ்வாறான கள ஆய்வுகள் எதனையும் மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் மின்சார சபை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை இந்த பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழுகின்றனர். மற்றும் அவர்கள் பொருளாதார ரீதியாக இவ்விடத்தில் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்ற காரணங்களை முன்னிட்டு எழும் முரண்பாடுகளைக் கருத்திற் கொண்டு சம்பூர் பகுதியினை கைவிட்டு திருகோணமலையில் வேறு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பேச்சாளர் 2007ம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரியிருக்கின்றார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக ஊடக மற்றும் தகவல் பிரிவின் தலைமையாளர் ஸ்ரீ தினகர் அஸ்தீனாவிடம் வினவியப்பொழுது சம்பூர் பகுதி சிக்கல் நிலையினைக் கருத்திற்கொண்டு அனல் நிலையம் அப்பகுதியில் அமைப்பது குறித்து இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் எந்தவிதமான இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த சம்பூரின் 500 ஏக்கர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 500க்கும் அதிகமான வீடுகள் அதில் வசித்து வந்த மக்களின் அனுமதியின்றியும், முன்னறிவித்தல் இன்றியும் அரசாங்கம் அழிக்க நடவடிக்கை எடுத்திருந்தது இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தலின் பின்னராகும்.
 
அந்த அனல் மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சம்பூர் பகுதி மக்கள் சூனியப் பகுதி என்று இந்தியப் பிரதிநிதிகளுக்கு நிரூபணம் செய்ய அரசாங்கம் இவ்வாறு தமிழர் பூர்வீகப் பகுதியினை அழித்துள்ளது. இது தொடர்பாக மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் வினவியப்பொழுது இவ்வீடுகள் தமது அமைச்சின் உத்தரவின் பேரில் அன்றி வேறு ஒரு அமைச்சின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தியா இப்பகுதியில் மின் நிலையம் அமைக்க தொடர்ச்சியாக விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் சீனாவின் உதவியினைப் பெற இலங்கை நடவடிக்கை எடுத்துதிருந்தது. இந்த நிலையில் கேந்திர அரசியல் முக்கியத்துவத்தினைக் கருதியும், சீனா இப்பகுதியில் வேரூன்றுவது தொடர்பில் உள்ள அதிருப்தியையும் கருத்திற்கொண்டும் சம்பூர் பகுதியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காலூன்ற இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்தியாவும் சீனாவும் பல்வேறு வழிமுறைகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குள் தலையிட மேற்கொள்ளும் முயற்சிகளும், இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புலிகள் என்ற பெயரிலான துன்புறுத்தல்களும் கே.பியின் கைதினாலும், வடக்கு தேர்தல்களின் தந்திரோபாய கொள்கைகளினாலும் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட முடியும்.
 
சரத் பொன்சேகாவை கொல்லும் நோக்குடன் 2006 ஏப்ரல் 25ம் திகதி புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் படையினர் மேற்கொண்ட முதல் யுத்த நடவடிக்கை சம்பூர் பகுதியின் மீது தரை வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் ஆரம்பமாகியது. இந்த மோதல்களினால் சம்பூர் மக்கள் கிடைத்தவற்றை வாரி சுருட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இம்மக்கள் தற்பொழுது மட்டக்களப்பு, கிளிவெட்டி, பட்டித்திடல், மற்றும் கட்டைப்பறிச்சான் பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் பரந்து வாழுகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்த பகுதியினை கையகப்படுத்திக் கொண்டார்.
 
சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொது மக்கள் அல்லர் என்றும் புலிகளினால் அங்கு தமது பாதுகாப்புக்கென அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள் என்று இம்மக்கள்  தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அவர்களினால் அவர்களின் வசிப்பிடங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். எனினும் 2006ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் திகதி திருகோணமலை மாவட்டச் செயலாளர் 2000ம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் வசித்த மக்கள் அப்பகுதியின் பூர்வீக மக்கள் என்றும் அவர்கள் அரசாங்கத்தினால் பதிவுக்குள்ளான மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த நடவடிக்கையினால் அகதிகளாகியுள்ள சம்பூர் மக்களின் பூர்வீகப் பகுதியினைத் திட்டமிட்டு அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது என்பது இதன் ஊடாக நன்கு புலனாகின்றது.
 
தற்பொழுது அகதி முகாம்களில் இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அளவற்றதாகும். இலங்கைப் பிரஜைகளாக வாழ்வதற்கான பின்னணியினை இந்த அரசாங்கம் இல்லாமற் செய்து விட்டது என்று சுட்டிக்காட்டும் இந்த இடம் பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு முகாமில் இருந்த போது கடந்த ஜுன் 16ம் திகதி பொலிசார் தடியடிப்பிரயோகம் நடத்தி வௌ;வேறு பகுதிகளுக்கு பலவந்தமாக அழைத்துச் சென்று முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தங்க வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை பொலிசார் ஈவிரக்கமின்றியும் நடத்தியுள்ளனர். வெளிநாட்டு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர் இந்த மட்டக்களப்பு முகாம்களுக்கு விஜயம் செய்வது இலகு என்பதனாலும், அதனால் தங்கள் உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்றும் கருதும் அரசாங்கம் இவ்வாறு மக்களை அதி உயர் பாதுகாப்பு வலய அண்மித்த முகாம்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. மட்டக்களப்புக்கு அண்மைப்பகுதிகளில் 11 முகாம்கள் இருந்ததாகவும், இதில் 5 முகாம்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இந்த முகாம்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.