முகாம்களில் உள்ள 3 இலட்சம் பேரின் வாக்குகளை, ஜனாதிபதி தேர்தலுக்கு அபகரிக்க திட்டம் – ரணில்

ranilஅகதிமுகாம்களில் புலிகள் இருப்பது உண்மையென்றால் அவர்களை மாத்திரம் தடுத்து வைத்துக் கொண்டு ஏனைய அகதிகளை உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசுக்கு வன்னி மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பதால்தான் வன்னி மக்களை அரசு அடைத்து வைத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“சுதந்திரத்திற்கான மேடை” என்ற அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இடம்பெயர்ந்த மக்களில் 80 வீதமானவர்கள் 6 மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த மே மாதம் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் வாக்குக் கொடுத்தார். அந்த வாக்கை நிறைவேற்ற அரசு இதுவரை எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மீள்குடியேற்றம் தாமதமாவதற்கு அரசு இரண்டு காரணங்களைச் சொல்கிறது. வன்னியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் முகாமில் புலிகள் உள்ளனர் என்பதுமே அந்தக் காரணங்களாகும்.

வன்னியில் எல்லா இடங்களிலும் கண்ணிவெடிகள் இல்லை. முகாமில் இருந்து 9 ஆயிரம் புலிகள் அடையாளங் காணப்பட்டனர் என்று பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர். இன்னும் 25 ஆயிரம் புலிகள் இருக்கலாம் என்று அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அவர்களை அகதிகளுடன் இணைத்திருப்பதால் அவர்கள் அகதிகளின் மனநிலையை மாற்றிவிடுவார்கள். 25 ஆயிரம் விடுதலைப் புலிகளை உடனடியாக அகதிகளிடமிருந்து பிரித்து வேறாகத் தடுத்துவைத்துவிட்டு ஏனைய மக்களை உடனடியாக மீள்குடியமர்த்த வேண்டும்.

அகதிமுகாம்களில் உள்ள மூன்று லட்சம் மக்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வன்னிக்கு வெளியேயுள்ள அவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து வாழமுடியும். மீதி ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை உடனடியாக மீள்குடியமர்த்த முடியும்.

ஆனால், அரசு எதுவித நியாயமான காரணங்களும் இல்லாமல் இந்த 3 லட்சம் மக்களையும் தடுத்து வைத்துள்ளது. வரப்போகும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வன்னி மக்களின் வாக்குகள் நிச்சயம் இந்த அரசுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இதை நன்கு உணர்ந்து கொண்டுள்ள அரசு இம்மக்களை தடுத்து வைத்து தேர்தலின்போது அவர்களின் வாக்குகளை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இம்மக்களைத் தடுத்துவைப்பதற்கு அரசுக்கு இதைவிட வேறு எந்தக் காரணமும் இல்லை.

பருவ மழை ஆரம்பமாகப் போவதால் இம்மக்கள் இப்போதே மீள்குடியமர்த்தப்படல் வேண்டும். இல்லையேல், அவர்கள் கடும் துன்பத்தை எதிர்நோக்குவார்கள் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.