“சனல் 4” வீடியோக் காட்சி தொடர்பாக எந்த விசாரணைக்கும் அரசு தயார்! ஊடகத்துறை அமைச்சர் யாப்பா அறிவிப்பு

kandy-sarkபிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட் டுள்ள வீடியோ காட்சி தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம்கொடுக்க அரசு தயார் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரி வித்தார்.

பிரிட்டனின் சனல்  4 தொலைக்காட்சி வெளியிட் டுள்ள வீடியோ காட்சி தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம்கொடுக்க அரசு தயார் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடை பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
முதல்கட்ட நடவடிக்கையாக இந்த வீடியோக் காட்சி குறித்து அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.

இதேவேளை, குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என வெளிநாட்டுச் சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது என எமது உள்நாட்டுப் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

ஊடகவியலாளர் திஸநாயகம் குறித்து அமைச்சர் யாப்பா கருத்துத் தெரிவிக்கையில், “திஸநாயகம் ஓர் ஊடகவியலாளர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் அவருடைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் சட்டம் யாருக்கும் பொதுவானது. அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் பகிரங்கமான முறையிலேயே அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெற்றன.

பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையிலேயே அவருக்குத் தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு இதற்கு மேலும் மேன்முறையீடுகளை செய்யலாம். அந்த அளவுக்கு நாட்டில் நீதிச் சுதந்திரம் உள்ளது.
சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக்கொண்டு அது ஊடக சுதந்திரத்தைப் பாதிப்பதாகக் கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும்”  என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.