தொடரும் திறப்புப் போராட்டத்தில் “திறப்பு பிரித்தானிய வெளியுறவுச் செயலரிடமும் சேர்க்கப்பட்டது”

btf-6வதைமுகாங்களில் வாடும் தமிழ் மக்களை திறந்துவிடக்கோரும் “திறப்புப்போராட்டத்தில் “ அத்திறப்பு பிரித்தானிய வெளியுறவுச் செயலரிடமும் சேர்க்கப்ப்பட்டது.

லண்டனில் மிச்சம் பகுதிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனால் அம்மையாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றில் பிரிதானிய தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் திரு. டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டார்.

திரு. டேவிட் மிலிபாண்ட் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனக் கோரி ஒருதடவைஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது அம்முயற்சிக்கு நன்றி தெரிவிக்குமுகமாகவும் , தொடர்ந்து தமிழ் மக்களின் அவலத்தை தீர்க்க பாடுபட வேண்டும் என்பதனை கோரும் முகமாகவும் ஒரு ஒளிக்காட்சி ஒன்று திரையில் காட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இத்திறப்பினைத் தாங்கி உலக வலத்தை ஆரம்பித்துள்ள தமிழகத்தைச் சார்ந்த திரு. சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் அவர்களால் இத்திறப்பு திரு . டேவிட் மிலிபாண்ட் அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

அத்திறப்பினைப் பெற்றுக்கொண்ட வெளியுறவுச் செயலர் அவர்கள் பேசும் போது தமிழ் மக்களினது உரிமைக்காக குரல் கொடுக்கும் சிவோன் மக்டொனால்ட் அம்மையாரை பெரிதும் பாராட்டினார். அவரை “நீண்ட உலக தரிசனம் “ கொண்டவர் என புகழ்ந்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய வெளியுறவுச் செயலர் அவர்கள் தமது இலங்கை விஜயத்தின் அனுபவத்தை பின்வருமாறு விபரித்தார். “ அகதி முகாங்களில் வாழும் பெண்கள் என்னை சூழ்ந்து கொண்டு அழுதனர். அவர்களின் கணவன்மாரும் பிள்ளைகளும் சில நாட்களுக்கு முன்னர் பிரிக்கப்பட்டுவிட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற செய்தி அப்பெண்களுக்கு தெரியாது.இதில் பெரும் சோகம் என்னவெனில் , இதுவரை அப்பெண்கள் தமது உறவுகளோடு இணைந்தார்களா ? என்ற செய்தி எனக்கு தெரியாது. ஏனெனில் சுயாதீனமாக கருத்துக்களைக் கூறும் அமைப்புக்களின் பிரசன்னம் அங்கு இல்லை “ என தனது அனுபவத்தை சபையில் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய செயலர் அவர்கள் இலங்கை அரசு சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளுக்கமைய மீள்குடியேற்றம் எதனையும் செய்யவில்லை என கூறிய திரு டெவிட் மிலிபாண்ட் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தாம் தொடர்ந்து பிரித்தானிய அரசினூடாக பாடுபடப்போவதாக உறுதி அளித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.