புலிகளுக்கு உயிரூட்டி, மக்களைப் பகடைக்காய் ஆக்காதீர்கள் – இரா.சம்பந்தன்

sambanthanஅரசியல் அபிலாசைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.

வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிசுக்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அவசரகால சட்டமானது எந்த ஒரு நாட்டிலும் அசாதாரண நிலைமைகளின் போதே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், இலங்கையில் மட்டும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் தமது ஆட்சிக்கு அவசரகால சட்டம் அவசியமானது என நினைக்கின்றன. சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாட்டுடனான அரசியல் அமைப்பு ஒன்று இங்கு இல்லாத காரணத்தாலேயே ஆட்சிக்கு வருகின்ற சகல அரசுகளும் அவசரகால சட்டத்தை ஒரு போர்வையாகக் கொண்டுள்ளன. இந்நிலை காலவரையறை அற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலே தற்போது காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.