எம்மை நீங்கள் கைவிட்டால் வேறு நண்பர்களை நாடுவோம்! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் மிரட்டல்!

SriLanka,templateId=standard__blobGSP Plus எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்தி தம்மை ஐரோப்பிய ஒன்றியம் தண்டிக்கும் பட்சத்தில், சீனா, ஈரான் போன்ற நாடுகளின் பொருண்மிய உதவியை தாங்கள் பெற்றுக்கொள்ள நேரிடும் என்று சிறீலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரித்தானியாவின் த கார்டியன் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் ஓய்வுபெறும் சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலர் கலாநிதி பாலித்த கோஹொன்ன, ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதன் மூலம் தமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் தண்டிப்பதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்:

“கடந்த காலத்தைப் பற்றியா? அல்லது எதிர்காலத்தைப் பற்றியா? சிந்திப்பது என்று ஐரோப்பிய ஒன்றியமே தீர்மானிக்க வேண்டும். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக சிறீலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் தண்டிப்பதால் ஏற்றுமதித் துறையை சேர்ந்த இலட்சக்கணக்கானோர், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படுவார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தவறான அணுகுமுறையை ஐரோப்பிய ஒன்றியம் கையாள்வதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இதனால் ஏற்படும் இழப்புக்களுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியும். பொருண்மிய பலம் என்பது மேலைத்தேய நாடுகளிடம் இருந்து கீழைத்தேய நாடுகளிடம் கைமாறியிருப்பதை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். கீழைத்தேய நாடுகளில் புதிய சந்தைகள் திறக்கப்படுகின்றன. சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, ஈரான் போன்ற நாடுகள் எமக்கு உதவிபுரியக்கூடும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் நாம் வெற்றியீட்டியுள்ளோம். இதனை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்து கொள்ள வேண்டும். மேற்குலகின் அழுத்தங்களால் நாம் கதிகலங்கவில்லை. உலகளாவிய ரீதியில் எமக்கு போதிய அளவு நண்பர்கள் உள்ளார்கள். பொருண்மிய வளம் என்பது உலகின் ஒருபாகத்தில் மட்டும் குவிந்துகிடக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஓய்வுபெறும் சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.