தடுப்பு முகாம் மக்களை வவுனியாவில் சொந்த இடங்களுக்கு அனுப்பும் மகிந்த அரசின் விழா

vavuniyaவவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட 9920 மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் விழா நடைபெற்றது இதில் பசில் ராஜபக்ஷ, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார்.

இந்த வைபவத்தில் ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, காவல்துறை இயக்குனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி, காவல்துறை உயரதிகாரிகள், வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எச்.எம்.கே.ஹேரத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்பங்களைச் சேர்ந்த 4585 பேர் இரண்டு தொகுதிகளாக யாழ். மாவட்டத்தி்ற்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் அம்பாறை மாவட்டத்திற்கும், 520 குடும்பங்களைச் சேர்ந்த 1896 பேர் இரண்டு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், 166 குடும்பங்களைச் சேர்ந்த 553 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைவிட, 751 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 7334 முதியவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 121 இந்து மற்றும் கிறிஸ்தவ குருமார்களும், அரச அதிகாரிகளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருமாக இதுவரையில் 19 ஆயிரத்து 360 பேர் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 9920 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வெள்ளியன்று ஆரம்பமாகி, அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.