வவுனியா அகதி முகாமில் மேலும் 10 ஆயிரம் பேரைக் காணவில்லை. அவர்கள் எங்கே ? – ஐ.தே.கட்சி

ranilவவுனியா அகதி முகாம்களில் இருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்திருந்த நிலை தற்போது மேலும் 10 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக வவுனியா அரச அதிபர் தெவித்துள்ளார். அப்படியானால் இவர்களில் எத்தனை ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்? எத்தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். எத்தனை ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.தே.க எம்.பி தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆயுதம் ஏந்தி எவரையும் சுட்டுக் கொல்வதற்கு முற்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்காக அவர் பேனாவையே ஆயுதமாக பாவித்தார். ஆனால் அவர் சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்க வேண்டியவர்கள் இங்கு பாராளுமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி எம்.பி.இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: யுத்தம் முடிவடைந்து 4 மாதங்கள் ஆகி விட்டன. இந்நிலையில் ஜனநாயகம் மலரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்றைய கால கட்டம் பயங்கரமானதாக இருக்கின்றது. ஊடகவியலாளர்களின் கைதுகள் மற்றும் படுகொலைகள் என இதுவரை 34 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கடத்தல்கள், தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

வேறு வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் விரைவாக கைது செய்யப்படுகின்றனர். ஆனால் ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்பட்டதாகத் தெயவில்லை.அண்மையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற ‘லங்கா” பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக தெனியாய பொலிசார் அறிவிக்கவில்லை.

பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.. உண்மையில் அவர்கள் மூவரும் கடத்தப்பட்டதே உண்மையாகும்.

தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்துகின்றனர். அவர்கள் அரசு பக்கம் இருந்திருக்காவிட்டால் இந்த மூன்று ஊடகவியலாளர்களின் கைது குறித்து லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.