வவுனியா முகாம் மக்களுக்கான மேலதிக அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம் செப்டம்பர் 15 அளவில் முற்றாக நிறுத்தப்படலாம்?

unவவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக வழங்கப்படும் மேலதிக அத்தியாவசிய உணவு பொருள் விநியோகமானது, எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதியளவில் முற்றாக நிறுத்தப்படலாம் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்தின் பின்னர் வவுனியா முகாம் சூழலில் உள்ள கடைகளிலேயே இடம்பெயர்ந்த மக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய நேரிடும் எனவும், உணவுகளைக் கொள்வனவு செய்யும் வசதியை முகாம்களில் உள்ள மக்களில் 5இல் ஒரு பகுதியினரே பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
முகாம் மக்களுக்கான உலர் உணவு விநியோகம் கடந்த ஒருமாத காலமாக சீராக நடைபெறவில்லை எனவும், எதிர்வரும் காலத்தில் ஏற்படப் போகும் நிலைமையினால், முகாம் மக்களின்
போஷாக்கு குறைபாடு மேலும் மோசமடையக் கூடும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இதுவரை மக்கள்
மீளக்குடியமர்த்தப்படாததன் காரணமாக, உயிர் காக்கும் அவசர பணிகளுக்கான உதவிகளைத் தவிர ஏனைய உதவிகளை தொண்டர் அமைப்புகள் நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபினப் பணிகள் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
 
இந்த உணவு நெருக்கடி குறித்து கலந்துரையாட, உலக உணவுத் திட்டம், கரிடாஸ் நிறுவனம், மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியன செப்டம்பர் 11ம் திகதி கூடவுள்ளதாக மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.