இலங்கை – மேற்குலக பனிப்போர் தமிழருக்கு விடிவைத் தருமா?

karutthu-nerudalவிடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை அரசுக்கு மறைமுகமாகத் துணை நின்ற மேற்குலக நாடுகள், இப்போது அதற்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்துள்ளன.

புலிகளுக்கு எதிரான போரின்போதும்- போருக்குப் பின்னரும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது பற்றிய ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதே இதற்குப் பிரதான காரணமாகும்.

அண்மையில் பிரித்தானியாவின் ~சனல் – 4| தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் இலங்கை அரச படைகளின் கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்யும் கொடூரக் காட்சி, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் சந்திக்கின்ற அவலங்கள் எல்லாமே உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றன.

வவுனியா தடுப்பு முகாம் அவலங்களை மறைப்பதற்கு அரசாங்கம் எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டபோதும்- அவை வெற்றியளிக்கவில்லை.

எங்காவது ஒரு சிறிய படம் அல்லது வீடியோ நாடா வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிங்கள அரசைத் திக்குமுக்காடச் செய்து விடுகிறது.

இவையெல்லாம் இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்கு நாடுகளை, பொது நிறுவனங்களை, மனித உரிமை அமைப்புகளை அதிச்சியடையச் செய்துள்ளன.

இது இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான- குறிப்பாக மேற்குலகம்- உறவில் பெரும் விரிசல்களை ஏற்படுத்தி வருகிறது.

இப்போது இலங்கை அரசுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே போன்ற நாடுகளுடன் சுமூகமான உறவு கிடையாது.

இலங்கை அரசின் வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னவுக்கு வீசா வழங்க மறுக்கும் அளவுக்கு பிரித்தானியாவுடனான உறவில் விரிசல் விழுந்திருக்கிறது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி மகிந்தவுடன் செல்லவிருந்த கருணா போன்ற அமைச்சர்களுக்கும் படையதிகாரிகளுக்கும் விசா வழங்க மறுக்கும் அளவுக்கு அமெரிக்காவுடனான உறவுகள் பாதிப்படைந்துள்ளன.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விசா மறுகின்ற அளவுக்கு கனாடாவுடனான இராஜதந்திர உறவு கெட்டுப் போய்க் கிடக்கிறது.

இவை மட்டுமே சிங்கள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் சம்பவங்களல்ல.

பிரித்தானியா செல்ல முற்பட்ட முன்னாள் அமைச்சரும் ஆளும் கட்சியின் எம்.பியுமான அர்ஜூன ரணதுங்க, மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் போன்றோருக்கும் விசா வழங்க பிரித்தானியா மறுத்திருக்கிறது.

இவையெல்லாம் தனிப்பட்ட காரணங்களுக்காக விசா மறுக்கப்பட்ட சம்பவங்களல்ல.

இலங்கை அரசின் பிரதிநிதிகளாக கருதப்பட்டவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் இலங்கை அரசுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் செல்வதையே புலப்படுத்துகிறது.

அதேவேளை இலங்கை அரசுக்கு சர்வதேச நிதியுதவிகள் கிடைப்பதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

பெரும் இழுபறிகளுக்கு மத்தியிலேயே- நிபந்தனைகளுக்குட்பட்ட முறையில்- சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்குக் கிடைத்தது.

ஆனால் அது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது.

அதேவேளை ஜிஎஸ்ரி பிளஸ் எனப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிச் சலுகையை இழக்கின்ற நிலையும் இலங்;கைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலைகளுக்கெல்லாம் காரணம் இலங்கை அரசின் போக்கேயாகும்.

போர்க்காலத்தில் இடமபெற்ற மனித உரிமை மீறல்கள், போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் கையாளப்படும் முறைகள், போருக்குப் பின்னர் அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளமை போன்ற காரணங்கள் இதற்கு அடிப்படையானவை.

எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.

ஆனால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை எப்போதும் ஏமாற்றலாம் என்ற கனவில் இருந்தது. இப்போது அதற்குச் சாவுமணி அடிக்கப்படும் கட்டம் வந்திருக்கிறது.

புலிகள் இயக்கம பலமுடன் இருந்த காலகட்டத்தில் அதற்கு எதிரான சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை உருவாக்கி- அதன்மீது தடைகளை ஏற்படுத்தியது இலங்கை அரசே.

அதுவே பின்னர் பேச்சுக்கள் குழம்பவும் போர் வெடிக்கவும் காரணமாகியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகள் புலிகள் தொடர்பாகக் கையாண்ட இறுக்கமான போக்கே இலங்கை அரசுக்கு இராணுவத் திமிரைக் கொடுததது.

அதற்குப் போர்வெறியை இன்னும் அதிகரிக்கக் காரணமாகியது.

சர்வதேசம் புலிகளை ஒதுங்கி வைத்து ஓரம் கட்டியபோது- இலங்கை அரசு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பேச்சுக்களில் தடைகளை உருவாக்கி புலிகளைச் சண்டைக்குள் இழுத்து வந்தது.

சண்டையில் இலங்கை அரசு புலிகளைத் தோற்கடித்துள்ள நிலையில்- தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் பலவீனமடைந்திருப்பதாகக் கருதி அவர்களை அடிமை நிலையில் வைத்திருக்கவே இலங்கை அரசு முற்படுகிறது.

வன்னியில் புலிகளோடு வாழ்ந்த மக்களை தடுப்பு முகாம்களுக்குள் சிறை வைத்திருக்கிறது.

அரசியல் தீர்வா- அது என்ன? அதற்கென்ன அவசியம், என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மனித உரிமை மீறல்களும் கண்டபடி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இவையெலலாம் இலங்கை அரசு இதுவரை போர்த்தியிருந்த போர்வைகளை அகற்றி அதன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளன.

புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்தபோதும் சரி- நான்காவது கட்ட ஈழப்போர் உருவாவதற்கு முன்னரும் சரி- இலங்கை அரசு கூறியதையே வேத வாக்காக நம்பிய சர்வதேச சமூகம் இப்போது அப்படியான நிலையில் இல்லை.

அப்போது புலிகளும், தமிழ் மக்களின் சார்பில் பேசியவர்களும் சொன்னதைக் கேட்க மறுத்த உலகம், இலங்கை அரசின் கருத்துக்களின் மீதே கவனம் செலுத்தியது.

இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

இலங்கை அரசின் சொற்களைக் கேட்க- நம்ப மறுக்கும் சர்வதேசம், பதில் கேள்வி எழுப்பி அரசைத் தடுமாறச் செய்கிறது.

இந்நிலைக்குக் காரணமே இலங்கை அரசு, இதுவரை கூறியவையெல்லாம் பொய் என்ற உண்மை அதற்குப் புரிந்திருப்பதுதான்.

இலங்கை அரசு தொடர்பாக சர்வதேச சமூகம் இப்போதாவது இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே.

சர்வதேச சமூகம் இதே கடும்போக்கை முன்னரே இருதரப்பின் மீதும் கடைப்பிடித்திருந்தால்- பேரழிவு மிக்க யுத்தம் ஏற்பட்டிருக்காது.

இருதரப்பும் அரசியல் தீர்வு ஒன்றுக்குள் வந்திருக்க வேண்டியிருக்கலாம்.

காலம் கடந்து சர்வதேச சுமூகம் இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொடுக்கிறது.

ஆனாலும் இது தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு தளமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எந்த வெளிநாட்டு நிரப்பந்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று கூறிக்கொண்டே அரசாங்கம் மேற்குலகுடன் முட்;டி மோத முயற்சிக்கிறது.

தமிழ ;மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு, மனித உரிமைகள் பேணப்படும் அச்சமற்ற வாழ்வுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் தேவைப்படுகின்றன.

சர்வதேச அரங்கில் இருந்து தாம் ஓரங்கட்டப்படுவதாக- ஒதுக்கப்படுவதாக எப்போது இலங்கை அரசு உணர்கிறதோ, அப்போது ஒரு திருப்பம் வரலாம்.

அதற்கான சூழல்கள் இப்போது உருவாகத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் புலம்பெயர் மக்கள் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது முக்கியமான தேவையாக இருக்கிறது.

மேற்குலகுடன் முரண்படும் சிங்கள அரசுக்கு இது நெருக்கடிகளை இன்னும் அதிகரிக்கும்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைவதற்கு புவிசார் ஒழுக்கில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாக அமைந்தது.

அதேபோன்று இப்போது ஏற்பட்டுவரும் ஒழுங்குமுறை மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருவியாக மாற்றிக்கொள்ளும் பொறுப்பும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

எந்தப் புவிசார் ஒழுங்குமுறை எமக்கு பாதகத்தை ஏற்படுத்தியதோ- அதே வழிமுறையின் ஊடாக புதியதொரு வெற்றியைப் பெற முயற்சிப்பதே சாலச் சிறந்த வழியாக இருக்கும். 
    
நன்றி: நிலவரம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.