சேனல் 4 வீடியோ காட்சிகள் தொடர்பாக இன்று ஐநாவில் இலங்கை விளக்கமளிக்க உள்ளது

unoஇலங்கையின் மனித உரிமை மீறப்படுவதாக கூறி, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக் காட்சிகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் இன்று(14) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விளக்கமளிக்க உள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 12 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட விடியோக் காட்சிகள் போலியானவை என விஞ்ஞான ரீதியில் ஒப்புவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் செனல் 4 தொலைக்காட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை தாம் பேரவையின் கூட்டத்தில் வலியுறுத்த போதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
இந்த கூட்டத்தில், மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
 
மேலும் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலவரம் தொடர்பாகவும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250000 பொதுமக்களை எவ்வாறு மீளக் குடியமர்த்துவது ,கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,000 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அளிக்கப்படவுள்ள மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்தும் மனித உரிமைகள் பேரவையில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
 
மேலும்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.