நாங்கள் அகதிகள் யாரையும் முகாமில் அடைத்து வைக்கவில்லை என்கிறார் மஹிந்த சமரசிங்க

mahindasamarasingheயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அகதிகள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், நவனீதம்பிள்ளையின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 12 ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட கருத்துக்கள் யதார்த்தத்திற்கு புறம்பானவை எனவும், இடம்பெயர் மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அகதி முகாம்களில் ஊடுறுவியிருப்பதனால் மிகவும் நிதானமாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
வடபகுதி அகதிகள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான ஓர் பின்னணியில் அகதிகளுடன் கலந்திருக்கும் புலி உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் அதன் மூலம் நாட்டின் ஏனைய பகுதி மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரத் தன்மை இந்த உலக சமூகமே அறிந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுமு; மனிதாபிமான நடவடிக்கைகளை திரிபுபடுத்தி, போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் வரையில் மக்களை மீளக் குடியேற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.