கருணைக் கொலைக்கு உட்படுத்துமாறு ராஜிவ் கொலை கைதி உண்ணாவிரதம்

19-robert-200இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பில் கடந்த 19 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும்  கைதியான கே. பீ. ரொபர்ட் பயஸ், தம்மை விடுவிக்க வேண்டும் அல்லது கருணைக் கொலைக்கு உட்படுத்துங்கள் என கோரி கடந்த வியாழன் முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், 19 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை, தமது குடும்பத்தின் நலனை கருதி தம்மை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு மனு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

14 ஆண்டுகள் வரை சிறையில் இருப்பவர்களை ஆலோசனை குழு (prison advisory board) விடுதலை செய்வது வழக்கம். ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2006ம் ஆண்டில் ஆலோசனைக் குழு கூடியது. அப்போது உளவியல் மருத்துவர் தகுதி சான்றிதழும், சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும் வழங்கினார்.

ஆனாலும இலங்கையில் நடைபெறும் போரை காரணம் காட்டி ரொபர்ட் பயஸை, குழு விடுதலை செய்யவில்லை. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அரசு சார்பற்ற, அதிகாரிகளை நியமித்து சட்டப்படி மீண்டும் ஆலோசனைக் குழுவை கூட்டி இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகியும் ஆலோசனை குழு கூட்டப்படவில்லை.

இது குறித்து கலெக்டர், சிறைத்துறை உயர் அதிகாரி ஆகியோருக்கு பயஸ் மனு செய்தும் பயன் ஏற்படவில்லை.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி, தலைமை நீதிபதி, மத்திய -மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கும் ரொபர்ட் பயஸ் மனுக்களை அனுப்பி உள்ளார்.

மேலும் தன்னை விடுதலை செய்யக்கோரி 3வது நாளாக இன்றும் வேலூர் சிறையில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தனது போராட்டம் குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில்,

கடந்த 19 ஆண்டுகளாக எனது குடும்பத்தை பிரிந்து தனிமைச் சிறையில் இருக்கிறேன். அரசியல் சாசனம் 161வது பிரிவின்படி மத்திய அரசின் ஆலோசனை பெறாமலேயே மாநில அரசு விடுதலை செய்யலாம். ஆனால் மாநில அரசு அதிகாரிகள் அதன்படி நடக்கவில்லை.

அரசியல் உள்நோக்கம் காரணமாகவே எனக்கு நீதி, நியாயம் மறுக்கப்படுகிறது. எனது நீண்ட கால சிறைவாசம், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது உண்ணாவிரதம் இருந்து நான் உயிர் விடுவதை இடையூறு செய்யாமல் விட்டுவிடுங்கள். தினந்தோறும் சாவதை விட ஒரு நாளில் செத்துவிடுவது நல்லது.

கரகாட்டக்காரன் படத்தில் செந்தில்-கவுன்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரி, என்னை விடுவிப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசும் ஆலோசனை கேட்பதில்லை. மத்திய அரசும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

ரொபர்ட் பயஸ் தொடங்கியுள்ள காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் அவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் நீதி கோரும் போராட்டமாகும்.

எனவே மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், மனித உரிமையில் அக்கறை உள்ள கட்சிகளும் இப்போராட்டக் கோரிக்கையை ஆதரித்துத் தமிழக முதல்வர் கவனத்தை இதன்பால் ஈர்க்க வேண்டும்.

தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகள் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும், குற்றப்பிரிவு விதிவிலக்கு எதுவுமின்றி, விடுதலை செய்ய வேண்டும் என்றும், குறைந்த அளவாக அவர்கள் விடுதலை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக முதல்வரைக் கேட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.