காணாமல் போன, தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது இனத்தவர்களுக்காக குரல் கொடுப்பது தேச துரோகமா?

2143Mano Ganeshan Jஇந்நாட்டில் கடந்த நான்கு வருட காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தமிழர்களுக்காகவும், நீண்ட நெடுநாட்களாக சிறைக்கூடங்களிலும், பூசா முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் குரல் கொடுப்பது எவ்விதம் தேச துரோகமும், அரசியல் சதியும் ஆகுமென அரசாங்கம் விளக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் இணைந்து மனோ அரசுக்கு எதிராக சதி செய்கிறார் என அமைச்சரவை பேச்சாளர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருடன் சேர்ந்து நான் அரசுக்கு எதிராக சதி செய்வதாக அமைச்சர் யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
 
 அவர் பெயர் குறிப்பிட்டுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக சதி செய்வதாக எனக்கு தோன்றவில்லை. எப்படியிருந்தாலும் அவர்கள் தொடர்பில் அவர்கள்தான் பதில் அளிக்கவேண்டும். என்னைப் பொருத்தவரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக நானும், எனது கட்சியும் அன்றும், இன்றும் குரல் கொடுத்து வருகின்றோம். எமது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும். அரசாங்கத்தை வீழ்த்தும் அரசியல் சதி நோக்கம் எனக்கு கிடையாது. சதி என்றால் இரகசியமாக செய்யவேண்டியதாகும். ஆனால் எங்களது செயற்பாடு வெளிப்படையானதாகும். இதில் அரசியல் நோக்கமும் கிடையாது. ஏனென்றால் அரசியல் என்றுவரும்பொழுது நான் எனக்கு வாக்களித்த கொழும்பு மாவட்ட மக்களை பற்றி மட்டும் தான் பேசியிருக்கவேண்டும். ஆனால் இன்று நாங்கள் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் தொடர்பிலும் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம்.
 
இது அரசியலுக்கு அப்பாட்பட்ட இன உணர்வாகும். இது இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த பகிரங்க உண்மையாகும். இந்நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகவே இல்லையென்று இந்த அரசாங்கம் கூறுகின்றதா? அல்லது பெருந்தொகையான தமிழர்கள் தடுப்புகாவல் கைதிகளாக சிறைகளிலும், பூசா தடுப்பு முகாமிலும் அடைத்து வைக்கப்படவில்லை என இவர்கள் கூற விளைகின்றார்களா? இல்லை என்று சொல்வார்களேயானால் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் சகிதம் காணாமல்போனவர்களை பற்றி, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை பற்றி என்னால் தகவல்கள் தரமுடியும்.
 
மேலும் காணாமல்போனவர்களை பற்றி மேலதிக விபரங்கள் தேவையென்றால் வடகிழக்கிலும், கொழும்பிலும் செயற்படும் அரசாங்கத்தின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கேட்டாலேயே இவைபற்றி நிறைய அறிந்துக்கொள்ளலாம். அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா எனது இந்த கருத்துக்கு பதில் கூறவேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.