இடைத்தங்கல் முகாம்களில் பாரிய மனிதப் பேரவலம் இடம்பெறக் கூடும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன

warningவவுனியா உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படக் கூடுமென பிரதேசத்தில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மக்களைப் பாதுகாப்பதற்கு காத்திரமான செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு இலங்கையை வலியுறுத்துமாறு தொண்டு நிறுவனங்கள், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நீல் பூணேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் இயங்கி வரும் 17 முக்கிய தொண்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து எழுத்து மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
 
இடைத்தங்கல் முகாம்களில்; தங்கியுள்ள 260,000 அப்பாவி பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி ஒப்பீட்டளவில் லேசான மழை பெய்த போதிலும் நான்கு இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
உறவினர்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோருக்கு சந்தர்ப்பம் அளித்தல், மீள் குடியேற்றுதல் போன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் சுதந்திரமாக இடம் நகர்வதற்கான உரிமை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்களைத் தம்முடன் தங்க வைத்துக் கொள்ள விரும்பும் உறவினர்களுக்கு சரியான முறையில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
 
குறிப்பாக மெனிக் பாம் முகாமில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.