தொலைபேசி மிரட்டல்களால் அச்சுறுத்தப்பட்ட ஜேம்ஸ் எல்டர், கொழும்பில் இருந்து வெளியேற்றம்

jeams_elderஐ.நாவின் சிறுவர் நிதிய (யுனிசெப்) பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை தமது நாட்டிலிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு திடீர் உத்தரவு பிறப்பித்து, அவர் இந்த மாதம் 7 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நாளை திங்கட்கிழமை வரை சிறீலங்காவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் எல்டருக்கு அடுத்தடுத்து விடுக்கப்பட்டுள்ள மர்ம தொலைபேசி மிரட்டல்களை அடுத்து, நேற்றைய தினமே கொழும்பில் இருந்து புறப்பட்டுவிட்டார் அவர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின், குறிப்பாக பெண்கள் சிறுவர்களின் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தெரிவித்த கருத்ஹ்டுக்களை அடுத்தே அவரை நாட்டை விட்டு வெளியேறும் படி அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சர்வதேசத்திற்கு கருத்து தெரிவித்து வருவதாலேயே அவரை நாடுகடத்த தீர்மானித்ததாக அரசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் சிறீலங்காவினை விட்டு வெளியேற்றப்படும் இரண்டாவது ஐ.நா அதிகாரி ஜேம்ஸ் எல்டர். மூன்று வாரங்களுக்கு முன்ன்னதாக ஐ.நாவின் மற்றுமொரு அதிகாரி பீற்றர் மெக்கெய்னின் விசாவினை நீடிக்க விடாமல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார். அதே போல் ஏற்கனவே பல்வேறு சர்வதேச தொண்டு பணியாளர்கள் சிறிலங்கா அரசிற்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் எல்டரின் விவகாரத்தில், ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், ஐ.நாவின் ஆசிய விவகாரங்களுக்கு பொதுச்செயலாளர் ஆகியோர், கோரிக்கை விடுத்த போதிலும், அவரை நாட்டில் தக்க வைத்துக்கொள்ள முற்றாக மறுத்திருந்தது சிறிலங்கா அரசு.

இந்நிலையில் ‘எமது தொண்டுப்பணியாளர்கள் நாடுகடத்தப்படுவது உலகில் அபூர்வம். ஜேம்ஸ் எல்டருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தல் அவசியம். எனவே அவர் சிறிலங்காவை விட்டு வெளியேறுவதை விட வேறு வழியில்லை என ‘யுனிசெப் அமைப்பு’ தெரிவித்திருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.