மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றத் தவறினால் கசப்புணர்வே மேலோங்கும் : பான் கீ மூன்

ban ki moonவவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்கு அரசு தவறும் அதேவேளையில் முகாம்களின் மோசமான நிலையினால் அவலங்கள் மேலும் அதிகரிப்பது கசப்புணர்வு மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுப்பதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுடன் நேற்று திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையின் போதே பான் கி மூன் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக ஐ.நா. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களின்போது, மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படுவது அவசியம் என்பதை வலியுறுத்திய பான் கி மூன், குறிப்பாக மழை காலம் வருவதனால் அதற்கு முன்னதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவது அவசியம் என வலியுறுத்தினார்.

அதேவேளை, போருக்குப் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்காக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளையிட்டும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை, அரசியல் செயற்பாடுகளின் மூலமான கருத்து ஒருமைப்பாட்டை உருவாக்குதல், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பாக பதிலளித்தல் போன்ற விடயங்கள் குறித்துத் தான் மகிந்த ராஜபக்ஷவுடனான பல்வேறு தொலைபேசி உரையாடலகளின் போதும், மூத்த ஐ.நா. அதிகாரிகள் மூலமாக அனுப்பிவைத்த செய்திகளின் மூலமாகவும் திரும்பத் திரும்ப கவனத்துக்குக் கொண்டு வந்ததாகவும் பான் கி மூன்இ பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளவாறு முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்தும் எனத் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு பெருமளவு வெளிநாட்டு உதவிகள் தேவையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மீள்குடியேற்றத்துக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இது அவசியமானது எனத் தெரிவித்தார்.

வடபகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது எனக் குறிப்பிட்ட பான் கி மூன், இதனைப் பெற்றுக்கொள்ளத் தவறினால் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சிகளில் பாதிப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மை இனக் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவதன் மூலமாக அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு முன்னோடியாக போர்க் காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்துலக சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பாக பதிலளிக்கக்கூடிய வகையிலான சுதந்திரமானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் பான் கி மூன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.