இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

G2020Protestகடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர்.

வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது.

இதன்பொழுது சிறுவர்கள், இளையோர், மூதாளர்கள் என்ற வேறுபாடின்றி பலரை பிரித்தானிய காவல்துறையினர் தாக்கியதோடு, இது தொடர்பான ஒளிப்படங்களும், நிழற்படங்களும், ஒலிவடிவங்களும் ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறான பின்புலத்தில், இவ்வாண்டின் முற்பகுதியில் இலண்டனில் இடம்பெற்ற ஜி-20 ஆர்ப்பாட்டங்களில் பொழுது பிரித்தானியப் பெண் ஒருவரைத் தாக்கிய காவல்துறைக் காவலர் ஒருவருக்கு எதிராக தற்பொழுது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்மாதிரியாகக் கொண்டு தங்களைத் தாக்கிய பிரித்தானிய காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தாக்கல் செய்து நீதிபெற முடியும் என்று சட்டநிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நிபுணத்துவம் பெற்ற குற்றவியல் சட்டவாளர்களை அல்லது இலவச சட்ட உதவி புரியும் அமைப்புக்களை அணுகி, இவற்றின் ஊடாக பிரித்தானியாவின் குற்றவியல் நடவடிக்கை அமைப்பான CPS நிறுவனத்திடம் ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், தம்மை தாக்கிய காவல்துறைக் காவலர்களை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிமன்றங்களின் முன்னிறுத்த முடியும் என்றும், சட்டநிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.