நாட்டில் பயங்கரவாதம் இல்லையெனும் பொழுது அமைச்சர்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏன்?

mangala samaraweeraபயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளமையினால் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டும். அதேபோல் நாட்டில் தற்போது அமுலிலுள்ள பாதுகாப்பு கெடுபிடிகளும் தளர்த்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர்களின் பாதுகாப்புக்கென இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் போதுமானது. அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு என்பது அவசியமற்றது என்றும் அவர் சொன்னார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், நாட்டைப் பீடித்திருந்த பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டபோதிலும், அதன் பிரதிபலனை மக்களால் அனுபவிக்க முடியாதிருக்கின்றது. சோதனைச்சாவடிகள், பாதுகாப்புக் கெடுபிடிகள் இதுவரையில் தளர்த்தப்படவில்லை. 110 அமைச்சர்களுக்கான வீண் விரயங்கள் அவர்களது பாதுகாப்புக்கென நூற்றுக்கணக்கான வாகனங்கள், பாதுகாப்புத் தரப்பினர் என விரயம் அதிகரித்துச்செல்கின்றது, மேலும், ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென 10 கோடி ரூபா வீதம் குண்டுதுளைக்காத 5 வாகனங்கள் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறை மீறியுள்ளது.

ஜனாதிபதியினதும் அமைச்சர்களினதும் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனை காலி மாவட்ட ஆளும் தரப்பு வேட்பாளர் முத்துஹெட்டிகம வெளிப்படுத்தியுள்ளார். எனவே, ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆக குறைப்பதன் ஊடாகவும், அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.