இடைத்தங்கல் முகாம்களில் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது – பியன்கா ஜக்கர்

BiancaJaggerஇலங்கையின் வட பகுதி  முகாம்களில் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரான பியன்கா ஜக்கர் தெரிவித்துள்ளார்.
 
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பருவப்பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அகதிகளுக்க உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
180 நாட்களில் மக்களை மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் வழங்கிய காலக்கெடுவில் இன்னமும் 50 நாட்களே எஞ்சியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதுவரையில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய உலக நாடுகளும் காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
முகாம்களில் சுமார் 50000 சிறுவர் சிறுமியர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
 
இலங்கையில் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டும் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளராக ஜெக்கர் செயற்பட்டு வருகின்றார்.
 
இடைத்தங்கல்  முகாம்களில் தடையின்றி பணிகளை முன்னெடுக்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்றும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பூரண விபரங்கள் வெளியிடப்பட வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடத்தப்பட வேண்டும், சர்வதேச உதவிகள் குறித்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்க வேண்டும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கென விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஜக்கர் முன்வைத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.