புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோவில் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில்

kathirkamam-temple2இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோவிலை புத்த பிக்குகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இக்கோவிலின் அருகே சிறிய புத்தர் கோவிலையும் கட்டியுள்ளனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள கதிர்காமத்தில் உள்ள முருகன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு சிறீலங்கா அரசு மாற்றியது. இப்போது பூசை செய்யும் உரிமையும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு புத்த பிக்குகளே பூசை செய்கின்றனர். வழக்கமான முறைப்படி பூசை செய்யாமல் வெறும் ஊதுபத்தியை மட்டுமே புத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாது கதிர்காமம் முருகன் கோவிலுக்கு அருகிலேயே சிறிய புத்தர் கோவிலையும் அமைத்து அங்கு சில புத்த பிக்குகள் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துள்ளனர் என்கிறார் முருகன் கோவில் அருகே உள்ள தெய்வானை அம்மன் கோவிலை நிர்வகித்து வரும் சுவாமி விஞ்ஞானனந்தா.

காசியைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக இந்தக் கோவிலை நிர்வகித்து வருகிறார். தெய்வானை கோவிலையும் கைப்பற்ற புத்த பிக்குகள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சிறீலங்கா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கதிர்காமம் முருகன் கோவில் புத்த பிக்குகளின் பிடியில் சிக்கியிருப்பது இலங்கைத் தமிழர்களை கவலை அடைய வைத்துள்ளது.

இதுதவிர இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் உள்ள கோவில்களும் புத்த ஆலயங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகிறது. 15 நாள்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு இந்தியா திரும்பியவர் இந்தகவலை இந்திய நாளேடு ஒன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.