தமிழீழத்திற்கு இலங்கை மன்னிப்பு கோரும் காலம் விரைவில் வரும்

190nerudaltamileelamயுத்தத்தின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அரசாங்கம் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னனிப்பு கோர வேண்டும். சிங்கள முற்போக்கு தலைவர்களின் கண்மூடித்தனமானதும் யுத்தத்திற்கு சார்பானதுமான நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிகளுக்கு முக்கிய காரணம் என்று சுதந்திரத்திற்கான அரங்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஜனநாயகத்திற்கும் உரிமைகளுக்குமான கூட்டமைப்பின் பணிப்பாளருமான சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் மறுக்கப்படும் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் வென்றெடுக்க சுதந்திரத்திற்கான அரங்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 

ஊடகவியலாளர் திசநாயகம் தொடர்பான தீர்ப்பு தொடர்பாகவும், அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும் நீங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் தாற்பரியம் என்ன?
 
ஊடகவியலாளர் ஒருவருக்கு தமது கருத்துச் சுதந்திரத்தினை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட தண்டனை இதுவாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுவொரு வெளிப்படையான ஊடக அடக்குமுறைச் செயலாகும். இலங்கையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக முதன் முதலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த அமுலில் இருக்கும் ஒரு சட்டத்தினை ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான நாம் கடும் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகிய இச்சட்டங்கள் மனித உரிமைச் சட்டங்களுக்கு முரணானவை. அதனால் இச்சட்டங்களை மீள் பரிசீலனைக்குட்படுத்துவது அவசியம் என்றே நாம் வலியுறுத்துகின்றோம். இது அரசாங்கத்தின் கடமையுமாகும். ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை அவசியம் எடுத்தாக வேண்டும்.
 
அத்துடன் மற்றுமொரு விடயங்களையும் கூறிக்கொள்ள வேண்டும். திசநாயகம் வழக்கின் தீர்ப்பு ஊடக அடக்குமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிரானதாயின் அது அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் பொதுவானது என்றே கருத வேண்டும். திசநாயகம் செய்ததாகக் கூறப்படும் தவறினை சிங்கள ஊடகவியலாளர்கள் எவரும் செய்யவில்லையா? மக்களை இனவாதத்திற்கு தூண்டிய சிங்கள ஊடகவியலாளர்கள் தான் இல்லையா?
 
அத்துடன் பயங்கரவாதத்தினை ஒழித்துக்கட்டி விட்டதாக பெரும் பிரசாரங்களை முன்னெடுக்கும் அரசாங்கம் இந்த பயங்கரவாதத்தடைச் சட்டம் அவசரகாலச்சட்டம் என்பவற்றை அமுல்படுத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. மறுபுறம் நாட்டிற்கு உல்லாசப்பிரயாணிகளையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அரசாங்கம் அழைக்கின்றது. இவை முரணான செயல்கள் என்றே கருத வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள், மாற்றுக்கருத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை அடக்குமுறைக்குட்படுத்தவே இந்த சட்டங்களை திருத்தாமல் அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்றே கருத வேண்டியுள்ளது. அதனால் தான் நாம் இந்த அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடைச் சட்டம் என்பனவற்றினை நீக்குமாறும், திசநாயகத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம்.  
 
ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிரான சூழல் நிலவும் நிலையில் உங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் எவ்வாறானதாக அமையப்போகின்றது?
 
எங்கள் இலக்கு உள்ளுர் மக்கள் தான். சர்வதேசத்தினை நம்பி காரியங்களில் இறங்குவது முட்டாள்தனமானது என்றே நாம் கருதுகின்றோம். இதுவரை இலங்கையில் நிகழ்ந்த விடயங்களில் சர்வதேசம் செயற்பட்ட விதம் குறித்து எங்களுக்கு கடும் விமர்சனங்கள் உண்டு. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களை அணிதிரட்டி செயற்படுவது எங்கள் திட்டம். இதற்கான பொதுவேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தொழிற்சங்கங்கள், ஊடக அமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஜனநாயக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரை இணைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படும். அத்துடன் இந்த அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்தே சுதந்திரத்திற்கான மேடை என்ற இயக்கம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி முதல் நாம் இந்த சுதந்திரத்திற்கான மேடை நிகழ்வுகளை பல்வேறு பாகங்களில் நடத்தி வருகின்றோம்.  இலங்கையில் தற்பொழுதைய அரசியல் சூழ்நிலையில் நாம் மட்டுமே பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் செயற்பட்டு ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். மக்கள் மத்தியில் எங்கள் பிரசாரங்களை முன்னெடுத்துச்செல்கின்றோம். அதன் ஊடாகவே அரசாங்கத்திற்கு ஓர் அழுத்தம் வரும். மக்கள் எங்களுடன் செயற்படுவது தான் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தும். நாங்கள் அச்சுறுத்தல், கொலைப்பயமுறுத்தல்கள் மத்தியில் செயற்படுகின்றோம். எங்கள் அமைப்பு பிரதிநிதிகளான நிமல்கா பெர்னாந்து, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரை தேசத்துரோகிகள் என்று முத்திரைக் குத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜனநாயகத்தினை மனித உரிமைகளை வலியுத்தும் எங்கள் செயற்பாட்டுக்கு ஓர் களம் தேவை. அந்த களமே சுதந்திரத்திற்கான மேடை இயக்கமாகும்.
 
உங்கள் செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானதாக அமைவதாக குற்றம் சுமத்தப்படுவது பற்றி?
 
ஜனநாயக விரோதமான இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட எமக்கு ஓர் களம் இல்லை. ஒரு பலமான சக்தியின்றி இந்த செயற்பாடுகள் சாத்தியமில்லை. இதனால் ஐ.தே.கவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமாகவுள்ளது. இலங்கை அரசு என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது. சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் இயல்பினைக் கொண்டது. அத்துடன் இதுவொரு வன்முறை அரசு. மூன்று கிளர்ச்சிகளை இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் அடக்கி ஒடுக்கியிருக்கின்றது. அதனால் இந்த அரசின் கட்டமைப்பினை மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டியுள்ளது. இந்த அரசின் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. இந்த நிலையில் அடுத்த அரசாங்கத்தினை அமைக்கக் கூடிய வாய்ப்பு கொண்ட எதிர்க்கட்சியினை நாம் மாற்றங்களுக்கான உடன்பாட்டுடன் இணைத்து பணியாற்றினால் தான் இந்த அரசக் கட்டமைப்பில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இது தான் யதார்த்தம். இந்த அரசாங்கம் முற்று முழுதான ஓர் இனவாத ஆட்சியினை அமுல்படுத்துகின்றது. இதில் சிறுபான்மையினரான டக்ளஸ், தொண்டமான், பிள்ளையான் ஆகியோர் இருந்தும் சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் விளையவில்லை. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சி இனவாதப் பாதையில் பயணிப்பதை தடுக்கும் ஓர் முயற்சியாகவும் இதனை நாம் கருதிக்கொள்ள முடியும். 
 
வன்னி படை நடவடிக்கைகளில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து மௌனம் காத்துவிட்டு இப்பொழுது உங்கள் பணிகளை தீவிரப்படுத்துவதில் ஏதும் நியாயம் இருப்பதாகக் கருதுகின்றீர்களா?
 
ஆமாம். அப்பொழுது நாம் மௌனமாக இருந்தது உண்மை தான். எனினும் யுத்தம் ஆரம்பித்தது முதல் நாம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினை வலியுறுத்தி வந்துள்ளோம். அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு ஓர் பலமான பின்னணி இருக்கவில்லை. தமிழ் மக்களுடன் எமக்கிருந்த தொடர்பாடல் பிரச்சினைகள் இதற்கு தடையாக அமைந்தன. எனினும் இந்த மௌனத்திற்காக நாம் மன்னிப்புக் கோரியே ஆக வேண்டும். இப்பொழுது நாம் பல்வேறு சவால்களை முறியடித்து செயற்பட ஆரம்பித்துள்ளோம். 88‐89 காலப்பகுதியிலும் இவ்வாறான ஓர் மௌனம் நிலவியது.
 
அத்துடன் இன்னொரு விடயம். சிங்கள மக்களுக்கு சிறந்த தலைமைத்துத்தினை  வழங்க வேண்டியவர்கள் இந்த அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்ததும் இந்த மௌனத்திற்கு காரணம் என்று குறிப்பிடலாம். சிங்கள முற்போக்காளர்களான ராவய ஆசிரியர் விக்டர் ஐவன், தயான் ஜயதிலக்க, பீரிஸ், சுமனசிறி உட்பட பலர் இந்த யுத்தத்தினை கண்மூடித்தனமாக நியாயப்படுத்தினர். இன்று வரை அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஆதரிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் பாசிச புத்திசீவிகள் என்று தான் நாம் குறிப்பிட வேண்டும்.    
 
ஜனாதிபதி மகிந்தவுடன் இருக்கும் தென்னிலங்கை மக்களை ஜனநாயக வழிமுறைகள் ஊடாக மாற்ற முடியும் என்று கருதுகின்றீர்களா?

முடியாது என்று இல்லை. மக்களுக்கு தெளிவுப்படுத்த முடியும். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம், இப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல காரணம் அல்ல ஆகிய விடயங்களை நாம் தெளிவுப்படுத்த முடியும். ஜனாதிபதியின் மகிந்தவின் ஆட்சி என்றுமே தொடரும் என்றில்லை. மக்களுடன் நாம் இணைந்து செயற்படாவிட்டால் வெற்றி கிட்டாது. 
 
இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்காக முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன? அவர்கள் விடுவிப்பினை சுதந்திரத்திற்கான மேடை வலியுறுத்துமா?

அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்பதனை அரசாங்கம் நினைவிற்கொள்ள வேண்டும். அரசாங்கம் அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கும் அணுகுமுறை முற்றிலும் தவறானதாகும். அதற்கான சர்வதேசச் சட்டங்களை அரசாங்கம் கைக்கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கான மேடையில் நாம் அந்த மக்களுக்காக தொடர்;ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அதற்கான ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.
 
அத்துடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் அரசாங்கம் அந்த மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை முன்வைக்காவிட்டால் நாட்டில் இனவாதம் தீவிரமடைந்து பாதகமான விளைவுகளே ஏற்படும். ஜனாதிபதியால் இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க முடியும். அத்துடன் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை வெற்றிடமாகியுள்ளது. புலிகள் இல்லாத நிலையில் அதற்கான பலமான குரலும் பேரம் பேசும் ஆற்றலும் அற்றுப்போய் விட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.