அனைவரின் கவனத்தையும் ஈர்ந்த உறவின் குரல்

Geneva_280909_4ஜ நா மனித உரிமை மன்றத்தை நோக்கிய சுவிஸ் தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 28 செப்டம்பர் 2009 திங்கள் பிற்பகல் ஜெனீவாவின் பிரதான வீதியினூடான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனிதச் சங்கிலிக் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்பார்த்த மக்களின் வருகையின்மை காரணமாக மாற்றம் பெற்று ஜநா மனித உரிமைகள் மன்ற வளாக முன்றலை ஊடறுத்து மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மாலை 14.30 மணிக்கு ஆரம்பமான இக்கவனயீர்ப்புப் போராட்டம் மாலை 17.00 க்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது.

  • சிறீலங்காப் பேரினவாத அரசின் யுத்த தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு வதைமுகாங்களுக்குள் வாழும் மக்கள் உடனடியாக விடுதலைபெற்று அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு சர்வதேச சமூகம் உடன் நடவடிக்கைகள் எடுத்தல்வேண்டும்
  • தமிழ் மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்த சிறீ லங்கா அரசை சர்வதேச நீதி மன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவது,
  • எமது மக்களின் தாயகம், தேசியம், சுய ஆட்சி முறையை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்
  • நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்திற்கு சர்வதேசம் பேராதரவு வழங்கவேண்டும்,
  • தமிழ் மக்களின் துன்பங்களை நீக்குவதற்கு, சர்வதேசத்தின் ஆதரவுடன் எமது மக்களுக்காக இணைந்து செயற்படத் துணிந்த போது நாடுகடத்தப்பட்ட தமிழீழ தலைமைச் செயலர் செல்வராசா பத்மநாதன் விடுதலைக்கு சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்
  • சிறையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் உட்பட ஊடகவியலாளர்கள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஜநா வின்  மனித உரிமைகள் ஆணயகத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உலகநாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகவியலாளர்கள் உட்பட பலர் ஜநாவில் கூடியுள்ள இவ் வேளையில்  நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகின்றது.

சுவிஸ் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடவில் ஜநா செயலர் மற்றும் சர்வதேச சமூகத்துக்குமான சுவிஸ் தமிழர்களின் வேண்டுகையடங்கிய மகயர் ஜநா மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவனீதம்பிள்ளை அவர்களின் செயலரிடம் கையளிக்கப்பட்டது.

மனிதப்பேரவலங்களைச் சந்தித்து தாங்கொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழ் மக்களின் குரலுக்கு சர்வதேசமும் ஜநா மனித உரிமைகள் ஆணையகமும் மதிப்பளித்து செயற்படவேண்டும் என்றும் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரனாக முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 260,000 மக்களையும் விடுவித்து அவர்களின் வாழ்விடங்களில் மீளக்குடியமர்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை ஜநாவும் சர்வதேசமும் முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் அடங்கிய மகயரைப் பெற்றுக்கொண்ட  நவனீதம்பிள்ளை அவர்களின் செயலர் தமிழ் மக்களின் மீள்  குடியமர்வு மறுவாழ்வு போன்ற விடையங்களில் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும், இது சார்ந்து தாம் சிறீலங்கா அரசுக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர் தமது பிரதிநிதிகள் தற்போது இலங்கைத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட மக்களுடன் நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் அனைவரின் கவனத்தையும் ஈர்ந்து சிறப்பாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.