இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து இருக்கும்: சீமான்

seemanஇலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் திலீபன் 22 வது ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளருமான இயக்குனர் சீமான் பேசுகையில்,

ராஜூவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் இலங்கைக்கு அமைதிப்படை எதற்காக சென்றதோ அதை செய்யவில்லை. மாறாக ஏராளமான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். ஆனால் இந்திய ராணுவத்தால் தமிழக பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க முடிந்ததா?

இதைக்கண்டித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். திலீபன் விட்டுச்சென்ற லட்சிய கனவு இன்றும் நம்மிடம் உள்ளது. இன்று இலங்கை மற்றொரு தேசம் என கூறும் தலைவர்கள் அன்று அமைதிப்படை இலங்கைக்கு சென்ற பொது கேட்டிருக்கலாம்.

அமைதிப்படை இலங்கைக்கு செல்லவில்லை எனில் தமிழ் ஈழம் பிரிந்து 20 ஆண்டுகளாகி இருக்கும். 62 ஆண்டுகால இந்திய அரசு தமிழுக்கும் தமிழனுக்கும் என்ன தொண்டு செய்துள்ளது. பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதியில்லை. பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி வேண்டும்.

இந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பதுங்கு குழியில் இருந்த 25 ஆயிரம் தமிழர்கள் புல்டோசர்கள் மூலம் நசுக்கி கொல்லப்பட்டுள்ளனர். அதை யாரும் கேட்கவில்லை. 120 நாட்களுக்கும் மேலாக 3 லட்சம் பேர் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இதைப்பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. தமிழ்ஈழம் என்ற ஒரு நாடு இருந்தால் மட்டுமே தமிழர்களுக்கு நல்லது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.