கோத்தபாய ராஜபக்க்ஷவை அமரிக்க பிரதி இராஜாங்க செயலர் சந்திக்க மறுப்பு?

question-mark1aஅமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் றொபர்ட் ஒ பிளேக்கை சந்திக்க முயற்சித்த போதிலும் கோத்தபாயவுடன் தொலைபேசியில் உரையாடுவதைக்கூட பிளேக் நிராகரித்துள்ளார்.

பிளேக் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இலங்கையில் தூதுவராக பணியாற்றிய போது, கோத்தபாய, அவரை பயங்கரவாதியொருவரை போன்றே கருதியே செயற்பட்டு வந்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, தனது சகோதரான கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்குமாறு, றொபர்ட் ஒ பிளேக்கிடம் பணிவுடன் கோரிக்கை விடுத்திருந்த நிலையே, பிளேக் இந்த சந்திப்பை நிராகரித்துள்ளார்.
 
றொபர்ட் ஒ பிளேக்கை சந்திக்க கோத்தபாய ராஜபக்ஷ 4 முறைக்கு மேல் முயற்சித்துள்ளதாக ராஜதந்திரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக அடக்குமுறை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரத்தைக் குறைக்கும் நோக்கில் கோத்தபாய, றொபர்ட் ஓ பிளேக்கிடம் சந்தித்து தெளிவுப்படுத்த எண்ணியிருந்தாக கூறப்படுகிறது.
 
அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் உள்ளிட்ட அந்த நாட்டு அதிகாரிகள், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்திப்பதை நிராகரித்தானது, இலங்கையை சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் மேலும் தனிமைப்படுத்தும் என இந்த தகவல்களை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை அமரிக்கா சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்ததனை அடுத்தே இலங்கை தொடர்பான அறிக்கை காங்கிரசில் சமர்ப்பிப்பது ஒத்திவைக்கப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்த போதும் அதுவல்ல யதார்த்தம் என்பது இப்போ தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.