தமிழர்கள் பாதுகாக்கப்பட்டு வரும் முகாம்கள் மிருகக்காட்சி சாலையல்ல – வடிவேல் கிருஷ்ணமூர்த்தி

krishnamoorthyதமிழக மீனவர்களை இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்பாக நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி உண்மையானது அல்ல. முற்றிலும் பொய்யான செய்தி இது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக கடல் எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைத் தாக்கவில்லை.

சர்வதேச கடல் எல்லையை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இல்ங்கை கடற்படையினர் மனிதாபிமான உதவிகளைச் செய்கின்றனர் அவர்களின் உடமைகளைப் பாதுகாக்கின்றனர். ஆனால் இலங்கை கடற்படையினர் மீதான இம்மாதிரியான குற்றச்சாடுகள் இரு நாட்டு கடற்படைக்கு இடையிலும் கசப்பை உருவாக்கும் முயர்ச்சியாகும் என்ற வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது இந்த நல்லுறவை குழப்புவதற்காக வேண்டுமென்ற ஊடகங்கள் வாயிலாக சிலர் பிரச்சனைகளை எழுப்புகிறார்கள் எனத் தெரிவித்தார்.
 
இவ்வாறு கூறிய வடிவேல் கிருஷ்ணமூர்த்தியிடம் நிருபர்கள் பல் வேறு கேள்விகள் கேட்டனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று இலங்கை அரசு இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லையே? ஏன் ? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு. இது குறீத்து நான் விளக்கம் அளிக்க முடியாது. பிரபாகரன் இல்லை. புலிகள் அமைப்பு அழிந்து விட்டது. இப்போது புலிகள் என்பது ஒரு மாயை என்றார்.
 
உடனே அடுத்த நிருபர். புலிகள் இல்லை என்கிறீர்கள் அவர்களை மாயை என்கிறீர்கள் அவர்கள் இருந்த போது தமிழக மீனவர்களை புலிகள் தாக்குகிறார்கள் என்றீர்கள். இப்போது அவர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள். அபப்டியானால் தமிழக மீனவர்க்ளை யார்தான் தாக்குகிறார்கள் என்று கேட்டதற்கு அவர்களை யார் தாக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியாது வேண்டுமானால் நீங்களே விசாரித்துக் கண்டு பிடியுங்கள் என்று சொன்னார் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.
 
வவுனியா முகாம்களில் வன்னி மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாக சர்வதேச சமூகங்கள் குற்றம் சுமத்துகின்றன. அங்குள்ளநிலைமைகளைக் காண தமிழக பத்திரிகையாளர்களை முகாம்களை பார்வையிட அனுமதிப்பீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு? போரினால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு சிறப்பான முறையில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புலிகளின் பிடிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அங்கு ஆட்சி செய்யும் போது முகாம் வாசிகள் குறித்து பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் பரப்பவும் வேண்டாம். அதுவல்லாமலும் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டு வரும் முகாம்கள் ஒன்றும் நீங்கள் பார்வையிடுவதற்கு மிருகக்காட்சி சாலையல்ல என்று காட்டமாக பதிலளித்த கிருஷ்ண மூர்த்தியிடம் நிருபர்கள் பல கேள்விகளை கேட்க முயன்ற போதும் அவர் அவைகளை செவிமடுக்கவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.