வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இலங்கை துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: சீமான்

Bangalore_seemanவாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளார்.

இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை என்று திமிருடன் கூறியுள்ளார்.

இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும். கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு, உடை, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள். பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.

இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிச அரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார்.

அதுவும் தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலம் கடந்தாவது அகதி முகாம்களுக்கு செல்ல முயற்சி நடக்கிறதே என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டே இப்படி திமிர்த்தனமாக பேசியுள்ளார். இது தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

மேலும் மீனவர் பிரச்சனையிலும், ’இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.

இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.