வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய இலங்கை துணைத்தூதர் ‐ தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

krishnamoorthyமுகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல என்றும், இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கவில்லை. என்றும் கூறிய இந்தியாவுக்கான இலங்கையின் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோரினர்.

மீனவர் சங்கங்களோ தூதரை வெளியேற்றாவிட்டால் கடும் போராட்டங்களை அவருக்கு எதிராக நடத்தப் போவதாக தெரிவித்துள்ள நிலையில். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர், தொல்.திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் அனுமதி உள்ளது. துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இதை மறைத்து, உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது போர் முடிந்துவிட்டதென்று கூறும் இலங்கை அரசு, வெளிநாட்டினரையோ, செய்தியாளர்களையோ தமிழ் மக்களைச் சந்திக்க அனுமதி மறுக்கிறது. இந்த நிலையில், முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விலங்குகள் போல் சித்திரித்துப் பேசிய துணைத் தூதரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
 
கச்சத் தீவு குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறியுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். அவரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளார் திருமாவளவன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு, இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியத் தமிழர்களையும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இழிவாகப் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது.கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.
 
அவர் இலங்கையில் உள்ள முகாம்கள் மிருகக் காட்சி சாலை அல்ல என்று வர்ணித்திருப்பது அந்த நாடு உலக மக்களின் கருத்தை மதிக்க மறுக்கும் காட்டு மிராண்டி அரசு என்பதைக் காட்டுகிறது.கச்சத்தீவு, இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்டது. கொடை தந்த நாட்டை எச்சரித்திருப்பதும், உங்களுக்கு உரிமை இல்லை என இந்திய மண்ணில் இருந்து பேச இடம் தந்திருப்பதே பெரும் தவறாகும். மீனவர்களைக் காக்கவும் கச்சத்தீவில் உரிமைகளை மீட்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், இல்ங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் மிருகங்களாக நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளது.

அதனை வேறு வகையில் இலங்கை துணைத் தூதர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றே இதைக் கருத வேண்டும்.இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.இப்படி வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தன் பேச்சு ஊடகங்களின் தவறான முறையில் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று பழியை ஊடகங்கள் மீது போட்டுள்ளார். முகாம்களை பார்வையிட இந்தியக் குழுவின் வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்துவதே என் வேலை என்றூ நேற்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.