யுத்தம் தொடர்பிலான இலங்கையின் அணுகுமுறை ஏனைய நாடுகளுக்கு பொருந்தாது

Sri Lanka Civil warயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பின்பற்றிய அணுகுமுறை ஏனைய நாடுகளுக்கு பொருந்தாது என பிராந்திய தந்திரோபாயக் கற்கை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் அமல் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிலிப்பைன்ஸின் மின்டாரோ தீவுகளில் இடம்பெற்று வரும் தீவிரவாத பிரச்சினைக்கு இலங்கை வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சமாதானத்தை நிலைநாட்ட எத்தனிக்கும் ஏனைய நாடுகள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை தீர்வுத் திட்டத்தினை முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் அடைந்த யுத்த வெற்றிகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் நீண்டகாலமாக நீடித்து வந்த யுத்தம் முடிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடித்ததன் மூலம் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உடனடியாக அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நடைபெற்றதனைப் போன்று ஏனைய நாடுகளில் நடைபெறாமல் இருக்க வேண்டுமாயின் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆயுதப் போராட்டங்களுக்கான தீர்வுத் திட்டமாக இலங்கையின் வழிமுறையை பின்பற்ற முடியாது என பிணக்கு தவிர்ப்பு தொடர்பான ஐரோப்பிய அமைப்பு தெரிவித்துள்ளது.
 
மின்டோரா தீவில் நிலவி வரும் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை மாதிரியாகக் கொள்ள வேண்டுமென சில பிலிப்பைன்ஸ் உயரதிகாரிகள் தெரிவித்து வருகின்ற போதிலும், அவை நடைமுறைச் சாத்தியப்பாடற்றதென சுட்டிக்காட்டப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.