நாடு சமாதனம் அடைந்து விட்டது; நீங்கள் திரும்பி செல்லுங்கள் – காங்கிரசின் அறிவுரை

INDIA-ELECTION/தமிழகம் உட்பட பாரத தேசத்திலும், ஏனைய உலக நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை விரைவாகத் தாயகம் திரும்பிச் செல்லுமாறு இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக தமிழகத்தில் ஏதிலிகளாகத் தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்கான பிரதிபலிப்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமையான யாழ்ப்பானம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதை ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும். ராஜராஜ சோழன், பல்லவர்கள் ஆட்சி காலங்களில் முல்லைத்தீவு வரை முழுமையான தமிழர்களின் பகுதியாக உருவாக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துச்சொல்லுகின்றன.

7 லட்சம் ஈழத்தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மேலும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.

இம்மக்களின் சொத்துக்கள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்விக் கூடங்கள் போன்றவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும்.

இதில் எவ்வளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு இராஜபக்சேவுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகமாகும். அந்த அளவிற்கு சிங்களவர்களை ஈழப்பகுதிகளில் குடியமர்த்த முயற்சிப்பார்கள்.

இதை கவனமாக கொண்டு இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டும்.”

இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.