தமிழ் மக்களின் உரிமைப்போர் யார் கையில்?

question-mark3aதமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும், எவ்வாறு அமையப் போகின்றது என பல்வேறு வாத விவாதங்கள் எழுந்துள்ள சூழல் இது. இரண்டு தசாப்தத்திற்கு மேலான ஆயுதப் போர் முறியடிக்கப்பட்டதும், அதனைத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்டதுமான நிலைமை  இப்புதிய சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இப்புதிய நிலைமையை எதிர்கொள்வதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான வழிமுறைகளை இனம்காண்பதற்குமான கருத்தாடலில் ஒரு வாசகரின் பார்வை இது. எப்போதுமே பல்வேறு கருத்தாடலின் களமாகச் செயற்பட்டு வரும் குளோபல் தமிழ் நியூஸ் இந்தக்கருத்தாடலுக்கான கதவையும் திறந்து வைத்துள்ளது. இது தொடர்பான கருத்தாடலில் பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறது. ‐ ஆசிரியர்

தமிழ் இனத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் முழுப்பொறுப்பையும் தம்மகத்தே கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி அதனை நம்பியிருந்த மக்களை தற்போது என்ன செய்வதென்ற தெரியாத குழப்பத்திற்கும் வெறுமை நிலைக்கும் உள்ளாகியிருக்கின்றதாகவே தெரிகின்றது.

அவ்வப்போது ஏற்படும் இந்த வெறுமை நிலையையும், குழப்பத்தையும் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரையும்  உருப்படியான பலனைத் தரவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

அதேவேளை இந்த வெறுமை நிலையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளிலும் தமிழ் மக்களுக்குத் தாமே தலைவர்கள் அல்லது வழிகாட்டி என்ற தோரணையிலும் பல்வேறு தரப்புகளும் களம் இறங்கியிருப்பது வெளிப்படையான ஒன்றே.

தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று அது பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில் அரசியல் ரீதியான போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்டுதல்களை வழங்கக்கூடியதான வலுவான தலைமைத்துவக் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.

தற்போதுள்ள வெறுமை நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதிகள் தாமே என்று முடிசூடிக் கொள்ளும் முயற்சியில் ஒரு தரப்பும்‐ தேசிய அரசியலுக்குள் கலந்து விட்டால் எல்லாவிதமான உரிமைகளையும், சலுகைகளையும் வென்று விடலாம் என்று ஆசைகாட்டும் மற்றொரு தரப்புமாக இரு தரப்பு நிலைப்பாடுகள் இப்போது கிளம்பியிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை விஸ்தரிப்பதற்கும் அதனை ஸ்திரப்படுத்துவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டு சிலர் முயற்சிக்கின்றனர்.

தமிழ் மக்கள் தேசிய அரசியலுக்குள் வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் அனைத்து விதமான உரிமைகளையும் பெற்று விடலாம் என்றும் இவர்கள் போதையூட்டுகின்ற முயற்சியில் ஈடுபடுவதற்கும் எத்தனிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

அதே நேரம் இன்னுமொரு பக்கத்தில் அரசாங்கத்துக்கு வால்பிடித்து, தடவிக் கொடுத்து, சாமரம் வீசும் அரசியல் கட்சிகள், புலிகள் தொலைந்து போய்விட்டார்கள், இனிமேலாவது எங்களோடு வாருங்கள், நாங்கள் சரியான அரசியல் தீர்வைத் தருகின்றோம்  என்கிறார்கள்.

ஆனால் யதார்த்த நிலையில் அவர்களே உருப்படியாகத் தனித்து சுயமாக, கம்பீரத்தோடு நிற்க முடியாதிருக்கும் போது இவர்களை நம்பி ஒட்டுமொத்தத் தமிழினமும் செல்வது என்பது எந்த வகையில் பொருத்தமானதாக இருக்கும் என தெரியவேயில்லை.

இது இவ்வாறிருக்க மற்றொரு புறத்தில் ஏதோ தமிழ் மக்கள் தான் இனவாதம் பேசுவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் இன்னுமொரு தரப்பினர்.

புலிகள் மடிந்ததுடன் ஒட்டுமொத்த தமிழ் இனவாதமும் செத்து விட்டதாகக் கூறும் இவர்களுக்கு யார் இனவாதத்தைக் கிளப்பியது என்றோ, யாருடைய இனவாதம் மனித உயிர்களை மிலேச்சத்தனமாக வேட்டையாடியதென்றோ தெரியாமல் போயிருக்கின்றது.

இலங்கையில் காலம் காலமாக அதாவது 1958இல், 1977இல், மற்றும் 1983 காலப்பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது தமிழ் இனவாதம் இருந்ததா? 1983இல் தான் புலிகள் இருந்தார்களா அதற்கு முன்னர் புலிகள் இல்லாமல் தானே தென்னிலங்கையில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டார்கள். இந்நிலையில் தமிழ் இனவாதம் பேசுவதாகக் கூறி தமிழர்களை அடக்கும் சதியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கின்றது. 

சிங்களப் பேரினவாதத்துக்கு முகமூடியை அணிவித்து பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியே இது. இப்படிப்பட்டவர்களின் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும், உரிமைப் போராட்டத்தை வலுப்பெற வைப்பதும் முக்கியமான தேவைகளாகவே இருக்கின்றது. இந்தக் கட்டத்தில் யாரை நம்பி தமிழ் மக்கள் முன்னே செல்ல முடியும் என்ற கேள்வி அனைத்து மட்டங்களிலும் எழத்தான் செய்கின்றது.

அண்மையில் நடந்து முடிந்த யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில், போட்டியிட்ட கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றமை சர்வதேச அரங்கிற்கே ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.  

பல்வேறு பிரச்சாரங்கள், அழுத்தங்கள், கெடுபிடிகள், மோசடிகளுக்கு மத்தியிலும் மேற்படி தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் தமிழ்த் தேசியத்தின் மீதான மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் அதே வேளை இறுக்கமான பிடிமானத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. 

எவருமே எதிர்பார்த்திராத இந்நிலை தமிழ்த் தேசியம் செத்துப் போய் விட்டதாகக் கூறி ஒப்பாரி வைத்து அழுது புலம்பியவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தல் முடிவு அமைந்திருந்தது. இத்தகைய எதிர்பாராத நெத்தியடியினால் அரசாங்கமே திணறிப்போய் இருக்கின்றது.

வடக்கில் அடுத்தடுத்து தேர்தல்களை நடத்தும் பகல் கனவுடன் இருந்த அரசாங்க தரப்பிற்கு  இந்தப் பின்னடைவுக்குப் பின்னர் அத்  தேர்தல்கள் குறித்து வாய் திறப்பதற்கான வாய்ப்புகளுக்கு வாய் பூட்டு போட்டதாக போயிருக்கின்றது. இப்போதுள்ள நிலையில் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே நம்பியிருக்க வேண்டியதொரு நிலை உருவாகியிருக்கின்றதாக தெரிகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பொருத்தமானதொரு அமைப்பு தானா அல்லது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டதை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான தகைமை அதற்கு உள்ளதா என்பது குறித்தும்  முதலில் பார்க்க வேணடிய தேவை தற்போது எழுந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிதான்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதேபோன்று புலிகளின் தலைமைத்துவத்தால் தனித்துவமாகவும் பகிரங்கமாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகவும்; செயல் பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.

இந்த வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான தகைமை இதற்கு உள்ளது. அதேவேளை மக்களின் ஆதரவு இதற்கு இருப்பதும்  மேலதிக தகைமை என்றே சொல்ல வேண்டும். 

ஆயினும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிவருவதாக சொல்லப்படும் முரண்பாடுகளும், உட்பூசல்களும் அதனை மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற அமைப்பாக மாற்றி விடக்கூடியதான  மிகவும் ஆபத்தான நிலையும் உள்ளது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் வலுவான கட்டமைப்பாக மாற்றிக்கொள்வதற்கு உகந்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருப்பதும் கவலைக்குரியதே.

இது இவ்வாறிருக்க எப்படி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற தொனியிலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் பேசி வருவது மக்கள் மத்தியில் ஒருவித மாயையை தோற்றுவிக்க ஆரம்பித்திருக்கின்றது.

மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு ஆதரவு கொடுக்க கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்பது போன்ற தொனியில் வெளியாகும் செய்திகளின் உட்கருத்துகள் நியாயமானவையாக இருக்கலாம். ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமை மகிந்தவுக்கோ அவரது அரசுக்கோ ஆலவட்டம் பிடிப்பதல்ல என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் 13 ஆவது திருத்தம் என்றும் பிறகு 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாலும் சென்று தீர்வு எனறும் சொல்லப்பட்டது ஆனால் இப்போதோ 13 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களையே பிடுங்கப் போவதாக தெரிய வருகின்றது. இதுதான் மகிந்தவின் கடைசி நிலைப்பாடு போல் தெரிகின்றது..
 வெறுமையான பானைக்குள் இருந்து சோற்றை அள்ள முடியாது என்பது போலவே  மகிந்த அரசாங்கத்திடம் இருந்து உருப்படியான அரசியல் தீர்வையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த நிலையில் அவரிடம் இருந்து தீர்வுத் திட்டத்தை எதிர்பார்ப்பதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதான திருப்திகரமான தீர்வு என்றால் அவருக்கு ஆதரவளிப்பதாக பிரசாரம் செய்வதும் அபத்தமானதாகவும் அதேவேளை ஆபத்தானதாகவுமே இருக்கும்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முன்னால்  பல கடமைகளும் பொறுப்புக்களும்  பரந்து கிடக்கின்றன. அவர்கள் முதலில் அதை மறந்து விடக்கூடாது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கான கோட்பாடுகளை மறந்து விட்டு மகிந்தவின் ஆட்சிக்கு எப்படியெல்லாம் முண்டு கொடுக்கலாம் என்று பேசித் திரிவது தமிழினத்தை சகதிக்குள் தள்ளும் முயற்சியாகவே அமைந்து விடும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். 

அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரின் அபிலாசைகளை மறந்து விட்டது என்றோ பாதை மாறிவிட்டது என்றோ கூறமுடியாது.  அத்தகைய நிலைக்குஎதிர் காலத்தில் கூடச்செல்லக் கூடாதென்பதே தமிழ்மக்களின் எதிர்பார்பபாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற கடமைகளை அது சரியாக நிறைவேற்றத் தவறினால் தமிழ் மக்களிடத்தில் இருந்து அது விலகி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போதைய வெறுமை நிலையை நிரப்ப எத்தனையோ சக்திகள் முயற்சிக்கின்றன.

சலுகைகள் அள்ளி வீசப்படுகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் உரிமைகள் விலை பேசப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றது. குறிப்பாக வடபகுதிகளிலுள்ள வளமான பிரதேசங்களை சிங்கள நிர்வாக அலகுகளுடன் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றது.  

சலுகைகள் வழங்கப்பட்டாலும் தமிழருக்கு உரிமைகளை வழங்க அரசு தயாரில்லை. முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக நடமாட முடியாமலும்  தமது சொந்த நிலத்தில் குடியமரும் சுதந்திரம் கிடையாமலும் இருந்து வருகின்றார்கள்.

திறந்தவெளிச் சிறையான யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தின் அனுமதியின்றி யாருமே வெளியே செல்ல முடியாது. சலுகைகளைக் கொடுத்து தமிழ்மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற முயற்சிகளிலேயே அரசாங்கம் சார்ந்த சக்திகளும் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிதாக எதையும் செய்து விட்டதாகத் தெரியவில்லை. இன்னமும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்குத் தயார் படுத்துகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுறுசுறுப்போடு செயலாற்றுவதாகவும் தெரியவில்லை.
இடம் பெறவிருக்கும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யார் வெற்றி பெறுகின்றார்கள் என்பது  முக்கியமல்ல. தமிழ்த் தேசியம் தோல்வியதைத் தழுவி விடக் கூடாதென்பதே மிகமிக முக்கியமானது.

புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு எனும்  ஒரே காரணத்தினால் தான் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள் என்பதை விடுத்து  அந்த ஆதரவைத் தொடர்ந்தும் தக்க வைப்பதிலும் சரி தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கைத் தக்க வைப்பதிலும் சரி கூட்டமைப்பு முழு முச்சுடன் தேர்தல் களத்தில்; இறங்க வேண்டும்.

பலமான நிலையில் இருந்தால் தான் அடுத்த நாடாளுமன்றத்திலும் தமிழ் மக்களின் பலத்தை உணர்த்த முடியும். மாறாக அடுத்த தேர்தலில் சறுக்கினால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் விலை பேசப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதை உணர்ந்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதே செயலாற்ற முன்வரவேண்டும்.

இப்போதைய வெறுமை நிலையில் தமிழ்த் தேசியத்தைத் தோற்கடிக்க செய்யப்படும் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதே கூட்டமைப்புக்கு இருக்கும் முக்கிய கடமையாகவும் அதேவேளை பாரிய சவாலாகவும் இருக்கின்றது.

இந்த நோக்கங்களை அடையத் தவறினால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும் பாதகமானதாக அமைந்து விடாது மாறாக தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் ஆபத்தாகவே மாறிவிடும்.

– யேசுநாதன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.