இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையால் பலன் இல்லை ‐ ஜெயலலிதா

jeyaதமிழகத்தில் தங்கியுள்ள ஈழ அகதிகளுக்கு நிரந்தரமான இந்தியக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழகக் கட்சிகளிடையே கருத்துமுரண்கள் தோன்றியுள்ளன. இதுதொடர்பாக
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய தலையீடு அவசியமாகிறது. மு.க. ஸ்டாலின் தன்னுடைய தீர்மானத்தில், 1984 முதல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என தனது தந்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
 
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும் என்று மத்திய அரசு பிரகடனம் செய்வதன் மூலம், தமிழ்மொழி செம்மொழி பிரகடனத்தைப்போல் கூடுதலாக எந்தப் பயனும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை. நிரந்தரக் குடியுரிமை என்ற தகுதி காரணமாக அவர் களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களிலிருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா?
 
தமிழ்நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவி அவர்களுக்கு அளிக்கப்படுமா? உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கின்ற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்? இல்லையெனில், 1960‐ஆம் ஆண்டு சிரிமாவோ‐சாஸ்திரி உடன்படிக்கையின் படி, அகதிகளாக இந்தியாவிற்கு வந்து, இன்று இந்தியாவில் கொத்தடிமைகளாக அருவருக்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய வழி தமிழர்களை விட கூடுதல் முன்னேற்றம் கிடைக்குமா? இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், பங்களா தேஷ், மியன்மார் மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமை தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்? இவை எல்லாம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். இவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் இவருக்கு நன்கு தெரியும். இருப்பினும், தனது மகன் மூலம் இந்தப் பிரச்சினையை எழுப்பி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
 
இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக்கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். சொந்த மண்ணில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக இலங்கையில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை தகுதி அளிக்கப்பட வேண்டும் என்று தன்னிச்சையாக தனக்கே உரிய பாணியில் கருணாநிதி அறிவித்திருப்பது, 1950‐களில் ‘சிங்களர்கள் மட்டும்‘, மற்றும் ‘தரப்படுத்தல்’ கோட்பாடுகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று ஜெயலலிதா தெரிவி்த்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.