ஏற்றுமதி சலுகையை நிறுத்தினால் எம்மை விட அவர்களே கூடுதலாக பாதிக்கப் படுவார்கள்

SRI LANKA-UNREST-POLITCSஐரோப்பிய ஒன்றியத்துடன் தாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பேச்சுக்களில் சாதகமான சமிக்கைகள் தென்படுகின்றன என்றும், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்குக் கட்டாயம் கிடைக்கும் என்றும்  வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

எமது நாட்டுக்கு முக்கியமான ஒன்றான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக நாம் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி வருகிறோம். தேவையான தகவல்களை நாம் ஒன்றியத்துக்கு வழங்கி வருகிறோம். பேச்சுகள் அனைத்தும் மிகவும் சாதகமாகவுள்ளன. எமக்கு நிச்சயம் இந்த வரிச்சலுகை கிடைக்கும்.

எப்பாடுபட்டேனும் இந்த வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாட்டுக்குப் பாதகமான செயல்களில் நாம் ஈடுபடமாட்டோம். நாட்டின் இறைமைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எமது நாடு தொடர்பாக சர்வதேச விசாரணைகளை நடத்த நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

எமது நாடு தொடர்பாக அவ்வப்போது சர்வதேச மட்டத்தில் பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை அனைத்தும் பின்பு பொய்யென நிரூபிக்கப்படுகின்றன.

அதேபோல் இலங்கைக்கு எதிராக ஹிலாரி கிளின்டன் முன்வைத்த குற்றச்சாட்டும் பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது. அந்தக் கூற்றை அமெரிக்கா மறுத்துள்ளது. இது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஹிலாரியின் கூற்றால் அமெரிக்க இலங்கை உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது சர்வதேச மட்டத்தில் எமது நாட்டுக்கு ஏற்படவிருந்த அபகீரத்தி அமெரிக்காவின் மறுப்பறிக்கையால் தடுக்கப்பட்டுவிட்டது. இலங்கை எடுத்த தீவிர முயற்சியின் காரணமாகவே எமக்கு இந்த வெற்றி கிட்டியுள்ளது.

இதேவேளை, புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்திய அரசின் விசாரணை மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அந்நாட்டின் விசாரணை முடிவுற்று இறுதி முடிவு வரும்வரை நாம் எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.