ஹிட்லர் கூட செய்யாத செயலை ராஜபக்சே செய்கிறார்: திருமாவளவன்

thiruma-200இலங்கை முகாம்களில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரியும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய விடுதலைப்பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீர.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் கலைக்கோட்டுதயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது,

கடந்த மே மாதம் முதல் இன்று வரை 3 லட்சம் தமிழர்கள் சிங்கள அரசால் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். உலக நாடுகளும் இந்த செயலை வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் போர் முடிந்த பிறகும் வதை முகாமிற்கு செல்ல பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த செயலை ஹிட்லர் கூட செய்யவில்லை. ஆனால் ராஜபக்சே செய்கிறார். முகாம்களில் குடிக்க தண்ணீர் இல்லை. சுகாதாரம் இல்லை. பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

வதை முகாம்களில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் சார்பில் பிரதமரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம்.

வருகின்ற 12-ந் தேதி மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 13-ந் தேதி மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியும் நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.

ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரக அதிகாரி பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் இலங்கை தூதரகம் இருக்க கூடாது.

செங்கல்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை(இன்று) முதல் அவர்கள் தண்ணீர் கூட குடிக்காமல் போராட்டத்தை தொடர உள்ளனர்’’என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.