சிங்கள பேரினவாதத்துக்கு மண்டியிட்டுள்ளதா தமிழ் தேசிய கூட்டமைப்பு?

tnaஇலங்கை தமிழர்கள் அகதிமுகாம்கள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது தொடர்பில் இன்று உலகின் கவனம் வெகுவாக தமிழர்களின் பக்கம் திரும்பியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு மனித உரிமைகள் அமைப்புகளும் இது தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும் விடுத்துவருகின்றன.

நமது அண்டைநாடான இந்தியாவில் அதன் தலைநகரத்தில் உள்ள இன்னொரு நாட்டின் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு இலங்கை தமிழர்களின் நிலை சர்வதேச நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழர்களின் அபிலாசையின் உருவாக்கமாக இயங்கவைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது.

வடக்கு மாகாணசபை தேர்தலுக்காக வவுனியா,யாழ்ப்பாணம் என்று திரிந்தவர்கள் தமது உறவுகள் முள்வேலிக்குள் அகப்பட்டு கிடப்பதுகண்டு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றால் அது எதுவும் இல்லையென்றே சொல்லவேண்டும்.

அது மட்டுமன்றி தமிழ் தேசியம்,தமிழீழ விடுதலைப்புலிகளே ஏகப்பிரதிநிதிகள்,சுதந்திரத்துக்கு அடுத்ததே அபிவிருத்தி என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தவர்கள் இன்று சிங்கள பேரினவாத அரசின் கீழ் மண்டியிட்டதுபோல் தென்படுகின்றது.

“நாங்கள் அகதிகள் தொடர்பில் பார்த்துக்கொள்கிறோம்.நீங்கள் அது தொடர்பில் எதுவும் கதைக்கக்கூடாது”என சிங்கள பேரினவாதத்தின் தலைமை என வர்ணிக்கப்படும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அதட்டலான கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கிப்போயுள்ளது.

அதுமட்டுமன்றி இன்று ஆயுதக்குழுக்களின் கோட்டையாக மாறிவரும் கிழக்கில் அந்த ஆயுதக்குழுக்களுடன் இணைந்து தமிழர்களுக்கு உரிமை பெற்றுக்கொடுக்கப்போகின்றோம் என்ற கோஸத்துடன் சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு சென்றுள்ளனர்.

அதிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலகத்தில் ஆயுதக்குழுகளினாலும் சிங்கள பேரினவாதிகளாலும் நடத்தப்படும் அபிவிருத்தி கூட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சிக்கு இவர்கள் ஆதரவு கரம் நீட்டவுள்ளார்கள் என்பதே பெரும் சோகமான நிகழ்வு.

இன்று கிழக்கு தமிழர்கள் வாய்பேசமுடியாத சடங்களாக வாழ்ந்துவருவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களே முக்கிய காரணமாகும்.
இ;ந்த நிலையில் என்றாவது ஒருநாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்காக குரல் கொடுக்கும் என்று எண்ணிய கிழக்கு மாகாண தமிழர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி தரக்கூடிய விடயமே.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது மக்களை மறந்து சிங்கள பேரினவாதிகளுக்கு அடிமையாகிவருவது கண்டு தமிழினம் பெரும் வேதனையின் மத்தியில் உள்ளது.

எனவே பல உயிர்களின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தமிழர்கள் இரத்தம் சிந்தி பெற்றுத்தந்த இந்த பாராளுமன்ற பதவியை அவர்கள் விடுதலைபெற்றுவாழ பயன்படுத்தவேண்டும் என்பதே எங்களது அவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.