அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பை நாம் நிச்சயம் அம்பலப் படுத்துவோம்

ranil-lion-flagஇலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் காணப்பட்ட உறவுகள் தொடர்பிலான தகவல்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் அம்பலப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினால்தான் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தெனியாய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதி செயலகத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
தயா மாஸ்டர் விடுத்த அச்சுறுத்தல் காரணமாகவே, முன்னாள் சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரினாலும் தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட முடியாது என அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் படைவீரர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், ஐக்கிய அமெரிக்காவின் பிரஜைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் அதிகாரம் அந்த நாட்டுக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற யுத்த வெற்றிகளை ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் துஸ்பிரயோகம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
உயிர்த் தியாகங்களைக் மேற்கொண்ட கிராமத்து இராணுவப் படைச் சிப்பாய்களின் அர்ப்பணிப்புக்களை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசாங்க சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டினை ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் மறந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதிகார மோகம் காரணமாக கட்சிகளை சீர்குலைக்க அரசாங்கம் சதித்திட்டம் தீட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.