தமிழரின் பாரம்பரிய நிலங்களில் சிங்களவரை குடியமர்த்துவதே இனவாத இலங்கை அரசின் நோக்கம்

sureshவன்னிப் பகுதியில் 30 வீதம் சிங்களவர்களை குடியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டுச் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதனால்தான் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் எனக் கூறி மீள்குடியேற்றத்தை அரசு காலம் கடத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர்கள் தனித்து வாழக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் சிங்களவர்களும் குடியேற்றப்பட வேண்டும் என்ற சிந்தனையுடனேயே அரசு செயற்படுவதாகத் தெரியவந்திருப்பதாககவும் குறிப்பிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன், இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்களின் தாயகக் கோட்பாடு எழாது எனக் கருதி அரசு செயற்படுவதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

“கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே முகாம்களில் உள்ள மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால், அங்கு ஒரு அங்குல நிலத்தில் கூட கண்ணிவெடிகளை அகற்றும் பணி இதுவரையில் தொடங்கப்படவில்லை.

இந்த இடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு தம்மை அனுமதிக்குமாறு பல அனைத்துலக அமைப்புக்கள் அரசை கேட்டிருந்தபோதிலும் அதற்கான அனுமதி இதுவரையில் வழங்கப்படவில்லை.

இறுதி போர் இடம்பெற்ற பகுதிகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ உள்ளன. அந்தத் தடயங்கள் அனைத்துலக சமூகத்துக்குத் தெரியவந்துவிடும் என்ற காரணத்தினாலும் அவற்றை மறைப்பதற்காகவுமே அந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அனுமதியை வழங்குவற்கு அரசு மறுத்து வருகின்றது.

மன்னாரில் உள்ள மடு, மாந்தை போன்ற பிரதேசங்களிலும் வவுனியாவில் ஓமந்தை போன்ற இடங்களிலுமாக 37 கிராமங்களிலேயே கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

180 நாட்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்த அரசு, போர் முடிவடைந்ததாகக் கூறி 5 மாதங்கள் முடிவடைந்துவிட்ட போதிலும் இதனைச் செயற்படுத்தவில்லை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகள் உள்ள இடங்கள் இதுவரையில் அடையாளப்படுத்தக்கூடப்படவில்லை. அரசு தனது படையை இதுவரையில் இந்தப் பணியில் ஈடுபடுத்தவில்லை. மாறாக இந்த மாவட்டங்களில் படை மயப்படுத்தலும் பெளத்த விகாரைகளை அமைக்கும் பணிகளுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனையிறவு கிளிநொச்சி போன்ற பகுதிகளில் படையினருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் இருந்த பெளத்த விகாரை பாரியளவில் புனரமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய அளவில் படை முகாம் அமைக்கப்படுகின்றது.

அதனைச் சுற்றி எல்லையோரமாக சிறிய சிறிய முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதனைவிட வழி முழுவதும் சிறிய சிறிய விகாரைகளும் அமைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது. இந்த மாவட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவே எதிர்காலத்தில் தமிழீழக் கோட்பாடு உருவாகாது என்ற கருத்துடனேயே அரசு செயற்படுகின்றது.

குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 30 வீதமான சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.

முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாக அறிவிப்பதன் மூலமாகவும் அரசு அண்மைக்காலமாக நாடகம் ஆடிவருகின்றது. முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்களில் 95 வீதமானவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால், 40 ஆயிரம் பேரை மீள்குடியேற்றியிருப்பதாக அரசு வெளிநாடுகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான பிரச்சாரங்களின் மூலமாக ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற சலுகைகளைப் பெற்றுக்கொள்வதுதான் அரசின் திட்டம்.”

இவ்வாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.