தமிழர்களுக்கு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு கொடூரமான உண்மை சம்பவம் இது

IMG_0146அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது.

அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான்.
 
மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்தில் ஒயா கொட்டி னேத? (நீ புலி தானே?)
 
இவன் இல்லை சேர் என்று தொடங்கி என்னை ஒன்றும் செய்து போடாதையுங்கோ என்று கெஞ்சினான். இவனுடைய கெஞ்சல்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. பதிலாக காலால் உதை தான் கிடைத்தது. இவன் அறையின் மூலையில் சுருண்டு விழுந்தான். தன் பலம் கொண்ட மட்டும் அடிக்காதேயுங்கோ அடிக்காதேயுங்கோ என்று கத்தினான். அந்தக்கதறல் அந்த அறையுள் எதிரொலித்துக்  கொண்டே இருந்தது……

அதே அறை……
 
இவள் கூனிக்குறுகி நிற்கிறாள்.  இவளை அழைத்து வந்தவன் கேட்கிறான் நீ கிளிநொச்சி தானே?
 
இல்லை 95ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்தனாங்கள்.
 
அப்ப ஐடென்ரிகாட்டிலை கிளிநொச்சி என்று கிடக்கு?
 
இடம்பெயர்ந்து கிளிநொச்சியிலை இருக்கேக்கை தான் இந்த ஐடென்ரி கார்ட் எடுத்தது என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பயத்தில் நாக் குழற ஆரம்பித்து விட்டது. கேள்வி கேட்டவன் இவளை நெருங்கியிருந்தான். அவனது மூச்சுக்காற்று இவளில் பட்டு எரித்தது.
 
செக் பண்ண வேணும் சட்டையைக் கழற்று என்று சொல்லியபடி மார்பு பட்டனில்; கை வைத்தான் அவன்.
 
இவை எதுவும் ஏதாவது திரைப்படத்தில் வருகிற சித்திரவதைக்காட்சிகள் அல்ல. நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறுபவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
 
நம்பித் தான் ஆக வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் அவை.
 
முதலாவது காட்சியில் வந்த இளைஞன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். ரஞ்சித் அவனது பெயர். அவனது அண்ணன் புலிகளுடன் முரண்பட்டு அங்கிருக்க முடியாமல்  நாட்டை விட்டு ஐரோப்பிய நாடொன்றுக்குப் புலம் பெயர்ந்தவன். அங்கும் புலிகளுடன் உடன்படாததால் புலிகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டவன்.
 
புலம்பெயர்ந்த நாட்டிலிருக்கும் அவனது அண்ணன் ஸ்பொன்ஸர் செய்ததில் அண்ணனைப் பார்த்துவிட்டு வரப் புறப்பட்டவனுக்குத் தான் விமான நிலையத்தில் மேற்படி விசாரணையும் அடிஉதையும் கிடைத்தது.
 
விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடித்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் போய் அங்கும் அலுவல் முடித்து போடிங் பாஸையும் உடைத்துச் கொண்டு கேற்றருகில் வரும் போது தான் இருவர் அவனை வழி மறித்து செக் பண்ண வேண்டும் என்று விமான நிலையத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
 
அங்கிருந்த ஒரு அறையில் தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றது. விசாரித்தவர்கள் இவனிடமிருந்த பணம் அனைத்தையும் பறித்துக் கொண்டனர். அம்மா அண்ணிக்காகச் செய்து கொடுத்திருந்த நகையும் போயிற்று. விசாரணை முடிகிற போது இரவாகி விட்டது. அவன் பயணிக்க வேண்டிய விமானம் போய் விட்டது. திரும்ப கொழும்பிலுள்ள அவனுடைய உறவினர் வீட்டுக்கு வந்து மறுபடி ரிக்கற் எடுத்து பிரயாணம் செய்ய வேண்டியதாயிற்று.
 
இரண்டாவது காட்சியில் இடம் பெற்ற பெண்ணின் பெயர் அமுதா. ஐரோப்பிய நாடொன்றில் இருந்த இளஞன் ஒருவனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயமாகி  இருந்தது. அவன் அவளை ஸ்பொன்ஸர் செய்து அழைத்திருந்தான்.  அவளும் உறவினர்கள் கையசைக்க விடைபெற்றவள் சுங்கம் முடித்து குடிவரவு குடியகல்வு தாண்டி கேற்றுக்குப் போகையில் தடுத்து அழைத்துச் செல்லப்பட்டாள்.  பிறகு நடந்த தான் மேலே சொல்லப்பட்டவை.
 
விமானம் புறப்படுவதற்காக இறுதி அழைப்பு விடுக்கபட்ட போது அவள் விடுவிக்கப்பட்டாள். அந்த அறையில் உடைகளைந்து அவள் பட்ட அவமானத்தை எண்ணி அவளால் பயணம் முழுவதும் அழுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.
 
இன்னொரு முஸ்லிம் இளைஞன். பெயர் நஜீப். மத்திய கிழக்கு நாடொன்றிற்குச் செல்வதற்காக வந்திருந்தான். தமது வீட்டை குத்தகைக்கு வைத்து பணம் எடுத்து ஏஜென்ஸிக்குக் கட்டிய கதை சொல்லிக் கத்தினான். அவன் கதறலை யார் கேட்டார்கள்? அவனுடைய ஊருக்கு அடுத்த ஊர் புலிகள் வந்து போகும் ஊராம். அந்தக்காரணம் அவர்களுக்குப போதுமாக இருந்தது அவனது பிரயாணத்தைத் தடுக்கவும் அவனைத் தடுத்து வைத்து தாக்கவும்.
 
ஏஜென்ஸி மூலமாகப் பணம் கொடுத்து வெளிநாடொன்றுக்குப் புறப்பட்டவன். இதேபோல போடிங் பாஸ் உடைத்த பிறகு இவர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அழைத்துச் சென்ற ஏஜென்ஸி விசயமறிந்து காரியம் பார்த்தார். பேரம் ஒன்றரை இலட்சத்தில் வந்து நின்றது. பணம் கைமாறியது. விசாரித்தவர்கள் விட்டுவிட்டதாக அறிவித்தார்கள். ஆனால் ராகுலன் வெளியே வரவில்லை. ராகுலனைக் காணவில்லை. விசாரித்ததில் மறுநாள் அவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருப்பது தெரிய வந்தது.
 
போர்டிங் பாஸ் உடைத்து விட்டு கேற்றுக்குப் போவதற்கிடையில் அந்த குறுகிய பிரதேசத்துள் எந்நேரமும் மூன்று அல்லது நான்கு குழுக்கள் நிற்கும் அவர்கள் தான் இந்த விசாரணையை மேற்கொள்வது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப்பிரிவு, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு எனப் பல பிரிவுகள். ஒரு பிரிவு விசாரித்துவிட்டு விட்டபின்பு மற்றைய பிரிவும் உங்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடைய அதிகாரம் எல்லையற்றது.
 
ஒருமுறை   கனடாவுக்குப் புறப்பட்ட பெண்மணி ஒருவர் தமது பிள்ளைகளுடன் விமானத்தி;ல் ஏறியமர்ந்த பின்னரும் கூட விமானத்திலிருந்து இறக்கப்பட்டு சோதனைக்குள்ளானார். இதனால் அவர் விமானத்தைத் தவற விட நேர்ந்தது. காரணம் அவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்பது.
 
விமான நிலைய அதிகாரிகளுக்கு இவை அனைத்தும் தெரியும். குடியகல்வு குடிவரவு அதிகாரி பாஸ்போர்ட்டில் பயணம் செய்வதற்கான திகதியுடன் கூடிய முத்திரையைப் பதித்த பிறகும் இவ்வாறு பல இளைஞர்களும் யுவதிகளும் பயணத்தைத் தொடர விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அவ்வதிகாரிகள் பதித்த முத்திரையை ரத்துச் செய்துவிட்டு பாஸ்போர்ட்டை வழங்கிய சம்பவங்களும் ஏராளமாகவுள்ளன.
 
லண்டனுக்கு ஸ்ரூடன்ற் விசாவில் வந்த காயத்திரி என்ற மாணவியும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு இரவே விடுவிக்கப்பட்டார். இதனால் விமானத்தைத் தவறவிட்ட அவர் முன்னைய ரிக்கற்றிலும் பார்க்க அதிகூடுதலான விலைக்கு ரிக்கற்றைப் பெற்றுப் பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல குறித்த திகதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமூகமளிக்காததால் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொள்ள வேண்டி வந்தது.
 
இவ்வாறு விசாரணைக்குள்ளாக்கப்படும் இளைஞர் யுவதிகள் பெரும்பாலும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் வன்னிப்பிராந்திய அடையாள அட்டையாயின் அவர்களை நடாத்தும் விதமே தனி.
 
ஆக, நீங்கள் வடக்குக் கிழக்கைச் சார்ந்தவராக இருந்தால் கட்டுநாயக்கா விமானநிலையத்தூடாகப் பிரயாணம் செய்வதற்கு பாஸ்போர்ட்டும் விஸாவும் மட்டும் இருந்தால் போதாது என்கிறார் அனுபவப்பட்ட ஒரு இளைஞர்.
 
கட்டுநாயக்கா என்ற பெயர் கேட்டதும் எனது நினைவுக்கு வருவது சர்வதேச விமான நிலையம் அல்ல. ஒரு சித்திரவதைக கூடம் தான் என்றும் கூறுகிறார் அந்த இளைஞர்.

இவர்களின் சொந்த பாதுகாப்பிற்க்காக இவர்களது உண்மையான பெயர்கள் மட்டும் மாற்றப் பட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.