150 நாட்களாக வதைமுகாங்களில் வாடும் மக்களை விடுவிக்கக் கோரி மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணி – பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

ஐப்பசி 17ம் திகதியோடு, முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு மீண்டும் – மீண்டும் நினைவூட்டி நீதிகேட்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. ஐப்பசி மாதம் 17ம் திகதி (17/10/2009) மதியம்12.00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் இல் ஆரம்பமாகும் இப்பேரணி ஹட் பார்க்கில் முடிவடையும்.

திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க் குற்ற விசாரனைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்பேரணியின் அடிநாதமாக விளங்கும்.

மிகவும் முக்கியமான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் தாயகத்தில் வாடும் எமது மக்களின் குரலாக ஒலிக்கவேண்டியது தமிழர் ஒவ்வொருவரது கடமையாகும், அத்துடன் தமிழர் அல்லாத நண்பர் களையும் அழைத்து வருவது அவசியமாகும். உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் , தேர்தல் வேட்பாளர்களையும் இப்பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பையும் , அழுத்தத்தையும் கொடுங்கள்.

அதேவேளை மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதற்கான அழுத்தத்தினை இலங்கை அரசிற்கு கொடுக்க வேண்டுமென பிரித்தானிய பிரதமருக்கு வலியுறுத்தும் மனு ஒன்று www.unlockthecamps.org எனும் இணையத்தளத்தில் காணக்கிடக்கின்றது. இதில் மக்கள் அனைவரும் தமது கையெழுத்தினையிட வேண்டும் எனவும் பேரவை கேட்டுக் கொள்ளுகின்றது.

அத்தோடு மீண்டும் ஓர் பிரித்தானிய பாராளுமண்ற விவாதம் ஒன்றிற்கான அழைப்பினையும் பேரவை விடுக்கின்றது, பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிகளிடமும் இவ்வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி அவர்களிடம் வதைமிகாங்களை பற்றிய விளக்கங்களை கொடுப்பதோடு உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டுமெனவும் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.