டென்மார்க் “தமிழர் பேரவை” அமைப்பதற்கான முதலாம் கட்ட வேலைத்திட்டம் பூர்த்தி

denmarkதாயகத்தில் நடைபெற்ற ஈழத்தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவமானது மற்றய நாடுகள் சிலவற்றுடன் இணைந்து நடாத்திய இனஅழிப்பின் போது நடைபெற்ற கொடூரத்தையும், அதனைத் தொடர்ந்து திறந்தவெளிச்சிறைகளில் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும் எம் மக்களின் அவலங்களையும் வெளிக்கொணரும் முயற்சிகள், பல இடம்பெயர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல டென்மார்க்கிலும் தமிழர் பேரவை ஒன்றை நிறுவுவதற்கான ஆரம்ப நடைவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல் துறைகளைச் சார்ந்து தாங்களாக முன்வந்து இணைந்து கொண்ட குழுவொன்றினால் இப்பேரவைக்கான யாப்பு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பான பணியின் இரண்டாவது தொடர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது விரைவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தி யாப்பிற்கான அங்கீகாரத்தைப் பெற்று, அதன்மூலம் பேரவைக்கான நிர்வாகத்தைத் தெரிவுசெய்வதுடன் பேரவையின் அடிப்படையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் விபரங்களைத் தமிழ்மக்களிடம் முன்வைப்பதோடு, அதற்கான அங்கிகாரத்தைப் புலம்பெயர் தமிழ்மக்களிடம் நடுநிலையார்களைக் கொண்டு நடாத்தப்படும் ஒரு தேர்தல் மூலம் பெறுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மிகவும் வேகமாக நடைபெற்றுவரும் இந்தத் தமிழர்பேரவை அமைப்பிற்கான அறிவிப்பு வெகுவிரைவில் டென்மார்க் வாழ் தமிழ்மக்களிடம் வெளியிடப்படும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.