இலங்கைக்கான உதவிகளை நிறுத்திக் கொள்ள பிரித்தானியா தீர்மானம்

british-flag-640இலங்கைக்கு வழங்கப்பட்ட வரும் உதவிகளை நிறுத்திக் கொள்ள பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பி.பி.சீ செய்தி வெளியிட்டுள்ளது.
 
இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு வழங்கப்படும் அவசர நிதியுதவிகளைத் தவிர்ந்த ஏனைய உதவிகளை நிறுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர், மெனிக் பாம் முகாமிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 70 வீதமான மக்கள் தங்களது உறவினர்களுடன் சென்று தங்கக் கூடிய சூழ்நிலையில் காணப்படுவதாக அமைச்சர் போஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
 
முகாம் நிலவரம் மோசமாக காணப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பருவப் பெயர்ச்சி மழைக்காலம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கைக்கான உதவிகளில் பெருந்தொகை குறைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவசர உதவிகளைத் தவிர்ந்து ஏனைய உதவிகளை ரத்து செய்ய பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
 
போதியளவு சுகாதார மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அல்லலுறுவதாக பி.பி.சீ. செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
 
எவ்வாறெனினும், முகாம்களில் போதியளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.