இலங்கை அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கை

obama1234அமெரிக்க அரசாங்கம் தயாரித்து வரும் போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

வன்னியில் நடந்த போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட செயலகம் இந்த அறிக்கையைத் தயாரிக்கிறது.

கடந்த மாதம் 21ம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் இது கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும்- திட்டமிடப்பட்ட திகதியில் சமர்ப்பிக்கப்படவில்லை. போர்க்குற்ற அறிக்கை இன்னமும் முழுமையாக்கப்படவில்லை, இதன்hலேயே அமெரிக்க காங்கிரஸ் அதனைச் சமர்ப்பிப்பதற்கான காலவரம்பை நீடித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஜெவ் அன்டர்ஸன் கூறியிருக்கிறார்.

“ போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த விவரங்களையும் இதில் உள்ளடக்க வேண்டியுள்ளது. அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும் முடிந்தவரையில் தெரிவிக்க வேண்டும். இது கடினமான பணி என்ற போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் இதைத் தயாரித்து வருவதாக” அமெரிக்க அரசின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை வெளியிடப்படுவது நான்கு வாரங்கள் பிற்போடப்பட்டுள்ளன.

இதுபற்றிய தகவல் அறிந்த நாளில் இருந்து இலங்கை அரசுக்கு பீதிக்காய்ச்சல் தொற்றி விட்டது.

யார் யார் மீது குற்றச்சாட்டு வருமோ, என்னென்ன குற்றச்சாட்டு வருமோ என்றெல்லாம் குழப்பமும்- கலக்கமும் ஏற்பட்டுள்ளது. அரசியல் மட்டத்தில் இருந்து இராணுவ மட்டம் வரைக்கும் இந்தக் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை வைத்து விசாரணை நடக்குமோ- தண்டனை வழங்கப்படுமோ என்பதல்ல பிரச்சினை.

அறிக்கையில் இடம்பெற்று விட்டால் காலம் காலமாக போர்க்குற்றச்சாட்டு என்பது இலங்கை அரசுக்கும், தற்போது பதவியில் இருக்கின்ற அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகளுக்கும் நீங்காத பழியாக இருக்கும். வருங்காலத்தில் அவர்கள் சர்வதேச அளவில் பல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை கூட உருவாகலாம். இது தான் இலங்கை அரசுக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான், போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது- இலங்கையின் இறையாண்மையை மீறும் செயல் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கிறது. “எந்தவொரு அமெரிக்க அதிகாரியும் வன்னிப் போர்முனையில் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடவில்லை.அரசசார்பற்ற நிறுவனங்களின் தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

மூன்றாவது தரப்பிடம் பெற்ற தகவல்களைக் கொண்டு போர்க் குற்றங்கள் பற்றிய அறிக்கையைத் தயாரிக்கப்பது நியாயமற்றது” என்றும் அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை அமெரிக்கா தயாரிப்பதற்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கவும் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

“2002 இல் போர்க்குற்ற நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட போது, இலங்கையின் பிரதமராக இருந்த தான் அந்த உடன்பாட்டில் கைச்சாத்திடவில்லை. எனவே எந்த ஒரு இலங்கைப் பிரஜையையும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது.” என்று கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. அத்துடன் இதன் மூலம் படையினரைத் தான் காப்பாற்றியிருப்பதாகவும் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாத சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை, இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதி இல்லை என அரச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பன இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனாலும், போர்க்குற்ற நீதிமன்றத்தை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டிலேயே குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும். சர்வதேச நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக எமக்கு நம்பிக்கை இல்லை.” என அரசாங்க அதிகாரியொருவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தேர்தல் பிரசாரங்களிலும் இந்த விவகாரம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. “திரிபுபடுத்துபட்ட செய்திகள் மூலமும், மோசடியாகத் தயாரிக்கப்படும் ஒளிநாடாக்கள் மூலமும் எமது வீரர்களை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்பதை தென்மாகாண மக்கள் உலகுக்குப் பறைசாற்ற வேண்டும்.” என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசாரங்களின் போது கூறி வருகிறார். இது அரசாங்கத்தை இந்த விவகாரம் எந்தளவுக்கு ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது என்பதற்குப் போதுமான சாட்சியாக அமைந்துள்ளது.

அதேவேளை, அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள் மூலம் மற்றொரு புறத்தில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுவதாகவும் தெரிகிறது.“இலங்கையை ஒரு போர்க்குற்ற நாடாக பிரகடனப்படுத்த புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சி செய்து வருகின்றன. புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையில் இந்த நாடுகள் இப்படிச் செயற்படுகின்றன. புலிகளின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அணி திரளுமாறு” வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச.

அதேவேளை கடந்த வாரம், கொழும்பில் ஜாதிக ஹெல உறுமயவும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தது. இது அமெரிக்காவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமே. “அமெரிக்க சிவில் யுத்தத்தில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்- அப்போது ஜனாதிபதியாக இருந்து ஆபிரகாம் லிங்கன் குற்றவாளி இல்லையா?” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கேள்வியும், முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் ஆகியோரை விமர்ச்சித்து எழுப்பப்பட்ட கோஷங்களும் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டின் தெளிவான அடையாளங்களாகும்.

மொத்தத்தில் தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் அனைத்துமே போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கத்தையும் படையினரையும் பாதுகாப்பதற்காக அணி வகுக்கத் தொடங்கி விட்டன. போர்க்குற்றசாட்டில் இருந்து தப்புவதற்காக தென்னிலங்கையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணையும் நிலையில்- அமெரிக்கக் காங்கிரசில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் பெறுமானமும், எதிர்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.