நிலக்கண்ணி வெடிகளைஅகற்றும் பணி அசாதாரண மந்த கதியில் நடைபெற்று வருகிறது

tna-samஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி அசாதாரண மந்த கதியில் நடைபெற்று வருவதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு சர்வதேச சமூகத்தினால் வழங்கப்படும் உதவிகளையும் அரசாங்கம் நிராகரித்து வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், பாதுகாப்பு தரப்பினரைத் தவிர்ந்த வேறு எவரையும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
டென் மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிக்கு காத்திரமான ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகளைக் கொண்டு கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அதிக நாட்டம் காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
நிலக்கண்ணி வெடி அகற்றும் விசேட நிபுணத்துவம் வாய்ந்த நபர்களுடன், நவீன கருவிகளையும் வழங்குவதாக குறித்த நாடுகள் உறுதியளித்துள்ளன.
 
அரசாங்கம் வெளிநபர்களை நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தத் தயக்கம் காட்டுவதற்கு இரண்டு ஏதுக்கள் இருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்த வலயத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மனிதப் பேரவலத்தை குறித்த நாடுகள் அடையாளம் காணும் என்ற காரணத்தினாலும், பெரும்பான்மை சமூகத்தின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதனாலும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் கால தாமதம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், இவ்வாறான காரணங்களுக்காக நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிலக்கண்ணி வெடி அகற்றும் போது வழமையாக பின்பற்றப்படும் விதிகள் பின்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் முதலில் மதிப்பீடு நடத்தப்பட்டு, ஆபத்தான வலயங்கள் வகையீடு செய்யப்படும் எனவும் அதன் பின்னர் கண்ணி அகழ்வு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், இலங்கையில் குறித்த பிரதேசங்களில் இவ்வாறான மதிப்பீடுகளோ அல்லது வகையீடோ மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
உரிய திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படும் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளினால் அதிக நேரம் வீண் விரயமாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்னமும் நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்டு வருகின்ற போதிலும் கிரமமான திட்டங்களின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.