ஜெனரல் சரத் பொன்சேகா – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சகோதரர் முரண்பாடுகள் வலுப்பெற்று செல்கிறது

laughing-guy-thumb168075கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் சர்வதேச வர்த்தகத்துறை, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சரத் பொன்சேகாவை நியமித்து, அந்தப் பதவியை ஏற்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் சரத் பொன்சேகா அதனையும் நிராகரித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா, தற்போது நடைபெற்றுவரும் இராணுவக் கண்காட்சியில் சரத் பொன்சேகாவின் புகைப்படத்தை ஒரு மூலைக்கு அகற்றியுள்ளதனால், கோதாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோரிடையிலான முரண்பாடு தற்போது மேலும் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவத்தின் 60வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்றுவரும் இராணுவக் கண்காட்சி அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளமை குறித்து கோபமடைந்துள்ள சரத் பொன்சேகா, நேற்றுமுன்தினம் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கண்காட்சியில் தமது புகைப்படம் அகற்றப்பட்டமை குறித்து விசனம் தெரிவித்துள்ளதோடு, இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு தம்மை தொடர்புபடுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதனால் குழப்பமடைந்த ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவை அழைத்து மிகவும் அழுத்தமாக குறைகூறியுள்ளதுடன், புகைப்படத்தை அகற்றிய லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா ஆகியோருக்கு சரத் பொன்சேகாவிடம் மன்னிப்புக் கோருமாறும் உத்தரவிட்டுள்ளார்.
 
இதனையடுத்து இந்த முரண்பாட்டை சீர்செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி சார்பாக சரத் பொன்சேகாவை சந்திக்கச் சென்றுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியலில் இடமளித்து மிகமுக்கிய அமைச்சுப் பொறுப்பொன்றை சரத் பொன்சேகாவிற்கு வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களைத் தவிர்ந்த வேறெந்த அமைச்சின் செயலாளர் பதவியை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியதாகவும் லலித் வீரதுங்க இதன்போது சரத் பொன்சேகாவிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அனைத்து யோசனைகளையும் சரத் பொன்சேகா உடனடியாக நிராகரித்துள்ளார். இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து நேற்று (07) முற்பகல் சரத் பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிட  செல்வதாகவும், இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளுமாறும், இதற்காக ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இராணுவச் சீருடையை அணிந்திருக்கும் வரை எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் கலந்துகொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்து ஜனாதிபதியின் அந்த வேண்டுகோளையும் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.