எட்டப்பனுக்கு கூட அமைச்சர் பதவி; ஜெனரல் பொன்சேகாவுக்கு அமைச்சின் செயலாளர் பதவியா?

JvP-2312புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கூட இருந்த கருணா அம்மானே அமைச்சராகவிருக்கும்போது, இந்த நாட்டைப் புலிகளிடமிருந்து பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுகின்றமை சரத் பொன்சேகாவையும், இந்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் எம்.பியான சுனில் ஹந்துன்நெத்தியே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு: ஜெனரல் சரத் பொன்சேகா விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 இந்தச் செய்தி உண்மையென்றால், அது அவரை மாத்திரமன்றி இந்த நாட்டையே அவமதிக்கும் செயலாகும். இந்த நாட்டைப் புலிகளிடமிருந்து காப்பாற்றிய அவர் அமைச்சருக்கு எழுந்து நின்று “சேர்” சொல்லிப் பேச வேண்டிவரும். அது எமக்கெல்லாம் பெரும் அவமானமாகும். புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கூட இருந்த கருணா அம்மானே அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும்போது, இந்த நாட்டைப் பாதுகாத்த சரத் பொன்சேகா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

உண்மையில் அரசிடம் அவ்வாறானதொரு திட்டமிருந்தால் தயவுசெய்து அதைச் செய்யவேண்டாம். அரசு அந்த நியமனத்தை உடன் நிறுத்தவேண்டும்.  என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.