தாங்களே அளித்த பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குமாம் – அய்யா நீங்கள் “காமெடி கீமடி ஒண்டும் பண்ணலையே”

Sri Lanka Tamils Expelledபயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இலங்கைப் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட ஆளில்லா உளவு விமான பாகங்கள், ஆயுதங்கள் போன்றவற்றின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைளில் அதாவது ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தலைநகர் கொழும்பில் இன்னமும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் பதுங்கியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த அமைப்புக்கள் பாரிய அழிவினை ஏற்படுத்த மீண்டும் நாம் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அவசரகாலச் சட்ட நீடிப்பு குறித்து நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மக்களை தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைத்து கெட்ட பெயரை சம்பாதிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தில் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆயுத போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்குடன் சில அமைப்புக்கள் ஐரோப்பாவில் இயங்கி வருவதாகவும், இவை அனைத்தும் ஊடகங்களின் பெயரைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏற்கனவே கொழும்பிற்குள் ஊடுறுவியிருப்பதாகவும், கட்டளைகளுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறக் கூடும் எனவும் அரசியல்வாதிகள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதன் காரணமாகவே பாதுகாப்புப் படையினர் இடைக்கிடை திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.