பிரபாகரனின் ஆவியே எம் மீதான அனைத்துலக அழுத்தத்திற்கு காரணம்

maindaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ‘ஆவி’ சிறிலங்காவை ஆள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. அதிகரித்துவரும் அனைத்துலக அழுத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

“எங்கள் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் இருக்கிறது. நாங்கள் அடைந்த வெற்றியை இல்லாமல் செய்வதற்கான அழுத்தம் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் கொடுக்கப்படுகிறது. ஆனால், அது நிகழ அனுமதிக்க மாட்டோம். நாட்டை பின்நோக்கி நடத்திச் செல்ல ஒருபோதும் இடமளியோம்” என்றார் மகிந்த ராஜபக்ச.

தென் மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சிறிலங்கா அரச தலைவர்.

“பிரபாகரன் இறந்து விட்டாலும் அவரது ஆவி இந்த நாட்டை ஆள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நிலையை நோக்கிச் செல்வதற்கு எவர் ஒருவருக்கும் உரிமை கிடையாது. எனவே இவை அனைத்தையும் மனதில் வைத்து எதிர்காலத்தை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும்” என பொதுக்கூட்டத்தில் மகிந்த கூறினார்.

அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகப் பகுதியில் புதிய நிர்வாக அலுவலகத்திற்கும், நிலக் கீழ் களஞ்சிய தாங்கிகள் அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார் சிறிலங்கா அரச தலைவர்.

இந்த களஞ்சிய தாங்கிகள் திட்டத்தின் கீழ் 14 தாங்கிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 8 தாங்கிகள் கப்பல்களுக்கு நிரப்பும் எரிபொருட்களைச் சேமிப்பதற்கும் 3 தாங்கிகள் எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட உள்ளன. ஏனைய தாங்கிகள் வானூர்திகளுக்கான எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

புதிய நிர்வாக அலுவலகக் கட்டடம் 1,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 15 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 360 மில்லின் டொலர் செலவிடப்படுகிறது.

சீன அரச வங்கி இந்த திட்டத்திற்கான 85 விழுக்காடு நிதியை வழங்கி உள்ளது. அத்துடன், சீன நிறுவனங்களே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கட்டியெழுப்பி வருகின்றன.

நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அரச தலைவர், அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா அரசின் பெருமையை இழிவுபடுத்தச் சிலர் முயற்சித்து வருகின்றார்கள் என்று குற்றம்சாட்டினார்.

ஆனால், அனைத்துலக சமூகத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.