மோசமான சூழ்நிலை காரணமாகவே அகதி முகாம்களில் முறுகல்கள் இடம்பெறுகின்றன

hrw-700315வடக்கு அகதி முகாம்களில் காணப்படும் மோசமான நிலைமையின் காரணமாகவே படையினருக்கும், அகதி முகாம் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
 
கடந்த 5ம் திகதி முதல் முகாம்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் ஏற்படக் கூடிய வெள்ள அபாயம் மற்றும் ஏனைய மோசமான காரணிகளினால் மக்கள், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்வதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
அகதிகளை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படக் கூடும் என்பதனை உதவி வழங்கும் நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டுமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா போன்ற முக்கிய உதவி வழங்கும் நாடுகள் அகதிகள் நிலவரம் குறித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
பருவப்பெயர்ச்சி மழைக் காலத்திற்கு முன்னர் அகதிகள் விடுவிக்கப்படாவிட்டால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அகதிகளை விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.