நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்

TAMIL_EELAM_PROVINCESநாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழு அக்டோபர் மாதம் 2 ம் நாள் தொடக்கம் 4 ம் நாள் வரை ஒஸ்லோவில் கூடியது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது.

ஒஸ்லோவில் உள்ள தமிழ் சமூகத்தை  ஆலோசனைக் குழு பொதுமேடையில் சந்தித்தது. தனிப்பட்டவர்களோடும் கலந்தாலோசனை செய்தது. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கு முதற்படியாக அரசியல் யாப்பு அவைக்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டும். அரசியல் யாப்பு அவை ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்குளையும் அனுமதிக்கும் களமாக விளங்கும்.

இந்த ஆலோசனைக் குழு தேர்தல் தொடர்பான நடை முறைகள் பற்றிக் கலந்துரையாடியது. தேர்தலில் போட்டி இடுவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட வயதெல்லை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும் குறிப்பிட்ட அகவை அடைந்தவர்கள் யார் என்பதையும் அதற்கான சான்றுகள் எவை என்பதையும் பற்றி ஆராயப்பட்டன.

அரசியல் யாப்பு அவைக்கு நேரடித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நெறிமுறை வகுக்கப்படும். வாக்காளர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும் பங்குகொள்ளவும் அனுமதிக்கப்படுவர். ஆலோசனைக் குழு அரசியல் யாப்பு அவையில் இருபாலாரும் பிரதிநித்துவம் செய்வது பற்றியும் ஆராய்ந்தது. தேர்தல் பற்றிய திட்டமிடல், கண்காணிப்பு தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களை அமர்த்துவதுபற்றிய சாத்தியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நாடளாவிய அடிப்படையில் அமைக்கப்படும் செயற்குழுக்கள் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் அடிப்படை வேலையை மேற்கொள்ளும். இதில், தேர்தலைத் திட்டமிட்டு நடத்துவதற்கு உதவுதல், புலம்பெயர் தமிழர்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் செய்திப் பரம்பல் செய்வது உள்ளடக்கப்படும்.

ஜெனிவாவில் அமைக்க இருக்கும் நாடு கடந்த அரசின் தலைமைச் செயலகமானது நாடளாவிய செயற்குழுக்களை ஒருங்கிணைக்கவும் மனிதவுரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும். .

வன்னியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதவுரிமை நெருக்கடிகள் பற்றி கலந்துரையாடிய ஆலோசனைக் குழு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது குடும்பத்தோடு மீளச் சேர்த்து வைக்கவும் பன்னாட்டு மட்டத்தில் அவர்களுக்குரிய பாதுகாப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்குத் தேவையான வழிவகைகள் பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் பாடுபடும். அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் தரவுகளை ஆவணப்படுத்துவதில் ஆலோசனைக் குழு ஈடுபட்டுள்ளது.

இலங்கை  அரசு நிரந்தரமாக உச்ச சிங்கள மேலாண்மைக்கு கீழ்ப்பட்ட வன்னி வதை முகாம்களில் தொடர்ந்து 300,000 தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமையை ஆலோசனைக் குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இந்த வதைமுகாம்களைப் பார்வையிட செய்தியாளர்களுக்கும் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இடம் பெயர்ந்தோர் தொடர்பான 14 வது கோட்பாடு “சுதந்திரமாக நடமாடும் உரிமையை” உறுதிப்படுத்தும் உரிமைக்கு எதிரானது. இது பன்னாட்டு சட்டத்தின் 13 ஆவது விதியையும் மீறுவததாக உள்ளது.

மேலும் பன்னாட்டு அரசியல் சட்டத்தின் 9 ஆவது 12 ஆவது 14 ஆவது சட்டத்திற்கெதிராக மக்களின் அரசியல் குடியியல் உரிமைகளை மறுப்பதாக நாம் கருதுகின்றோம்.
ஐ.நா சபையின் மனிதவுரிமை ஆணையம் இவ்வுரிமைகள் மீறப்படாதிருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்புடையது.

அகதி முகாமில் சித்திரவதைக்குள்ளாகியும் கடத்தப்பட்டும் காணாமற் போகும் தமிழ் இளைஞர்கள் குறித்து ஐ.நா.சபையின் மனிதவுரிமைக் குழ விசாரணை நடத்த வேண்டும். இப்படியான நடவடிக்கைகள் மனிதவுரிமைகளையும் மானிட நேயத்தையும் மீறும் செயலாகும்.

முனிதவுரிமை மீறல்களைச் செய்த அரசுக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையையும் அனைத்துலக நாணய நிதியம் வழங்கும் கடனையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும் என்று இவ் ஆலோசனைக் குழு கேட்டுக் கொள்கின்றது.

அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலை செய்ய அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்துடன் அந்த மக்கள் அனைவரும் அவரவரது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும.

அனைத்துலக சட்ட வரைவுகளின்படி தமிழ் மக்களின் உரிமையை மறுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துல சமூகம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களை விடுவிக்கவும் தலையீடு செய்தல் வேண்டும்.

இது அவர்களது கடமையும் பொறுப்பும் ஆகும். பன்னாட்டு சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.