தமிழனின் பிரதேசத்தில் மீண்டும் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பம்

manalaruதாக்குதல் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்ததாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் பாரிய சிங்கள குடியேற்றம் செய்ய சிங்கள அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களே இவ்வாறு மீள குடியமர்த்தவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதன் முதல்கட்டமாக 325 சிங்கள குடும்பங்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சகல வசதிகளுடனும் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மணலாறு பிரதேசத்தைச் சேர்ந்த கொன்னேவ, கம்பிலிவெவ, வெஹரவெவ, கொஹம்பகஸ்வெவ ஆகிய சிங்களக் குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்தோரே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான தொடக்க நிகழ்வு தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.எம்.சந்திரசேன தலைமையில் நடைபெற்றது.

அடுத்த பெரும்போகத்தில் அப்பகுதியில் உள்ள வயல்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நான்கு கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘வடக்கின் வசந்தம்’ 180 நாள் திட்டத்தில் இக்கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள தமிழர்களை மீளக் குடிமயர்த்துவதற்கு மட்டும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என அரசு காரணம் தெரிவித்து அதனைத் தாமதப்படுத்தி வருகின்றது.

இது தொடர்பாக தமிழ் அரசியல் வட்டராங்களிடம் கேள்வி எழுப்பியபோது, வன்னியைச் சொந்த இடமாகக் கொண்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தைத் திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு, சிங்களவர்களைக் குடியேற்றுவதில் அதிகளவு அக்கறையைக் காடடுவது அரசின் உள்நோக்கத்தை தெளிவாகப் புலப்படுத்துவதாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.